பஸ் கட்டண உயர்வை கண்டித்து திருச்சியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
பஸ் கட்டண உயர்வை கண்டித்து திருச்சியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் தோழமை கட்சிகளும் பங்கேற்றன.
மலைக்கோட்டை,
பஸ் கட்டணத்தை உயர்த்திய அ.தி.மு.க. அரசை கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே முன்னாள் அமைச்சரும், தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏக்கள் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, சவுந்திரபாண்டியன், ஸ்டாலின்குமார், காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ஜவஹர், கலை, கோவிந்தராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் ஜெரோம்ஆரோக்கியராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அருள், ம.தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் சோமு, சேரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் இந்திரஜித், மாநகர் மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், த.மு.மு.க. உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு, தமிழக அரசை கண்டித்தும், பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், “தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் உணர்வை புரிந்து கொள்ளாமல் கட்டண உயர்வுக்காக நடத்தப்படும் போராட்டங்களை அடக்க நினைக்கிறார்கள். பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறும்வரை மக்களுக்காக போராட வேண்டும். வருகிற 29–ந் தேதி தி.மு.க. சார்பில் நடைபெறும் சிறை நிரப்பும் போராட்டத்தில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்“ என்றார்.