மூதாட்டி கொலை: கணவன்- மனைவி உள்பட 3 பேர் கைது


மூதாட்டி கொலை: கணவன்- மனைவி உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 29 Jan 2018 4:45 AM IST (Updated: 29 Jan 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

சொத்தவிளையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவன்-மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி,

தூத்துக்குடி மாவட்டம் பூபாண்டிபுரத்தை சேர்ந்த நாகுவின் மனைவி சடச்சி (வயது 68). இவர் கடந்த மாதம், சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து காணிக்கை வசூல் செய்வதற்காக நெல்லை மாவட்டம் லெவிஞ்சிபுரத்துக்கு வந்தார். பகல் முழுவதும் சுற்று வட்டார பகுதி ஊர்களில் தனியாக சென்று காணிக்கை வசூல் செய்து விட்டு இரவு லெவிஞ்சிபுரம் பள்ளி வளாகத்தில் தங்குவது வழக்கம்.

இந்தநிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே சொத்தவிளை கடற்கரையில், தென்னந்தோப்பில் சடச்சி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரம் காணிக்கை பணம், நகை கொள்ளையடிக்கப் பட்டிருந்தன. இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலையில் துப்பு துலங்காமல் இருந்தது.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொலையில் நெல்லை மாவட்டம் உடையன்குளத்தை சேர்ந்த மந்திரமூர்த்தி (47), அவரது மனைவி துளசி (29), பேட்டை, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சிங்ககுமார் (29), ஆட்டோ டிரைவர் நல்லமுத்து குமார் (22) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இவர்கள் நான்கு பேரும் கடந்த மாதம் 27-ந் தேதி கன்னியாகுமரியில் உள்ள மந்திரமூர்த்தியின் உறவினர் வீட்டுக்கு ஆட்டோவில் வந்தனர். ஆட்டோவை நல்லமுத்து குமார் ஓட்டி வந்தார். பின்னர், 28-ந் தேதி காலையில் டீ குடிப்பதற்காக 4 பேரும் ஆட்டோவில் கடைதெருவுக்கு சென்றனர். அங்கு மூதாட்டி சடச்சி, காணிக்கை வசூல் செய்து கொண்டிருந்தார். அவரிடம் நிறை பணம் இருந்தது. இதைபார்த்த 4 பேரும் மூதாட்டியிடம் இருந்த பணத்தை பறிக்க திட்டமிட்டனர்.

இதையடுத்து மூதாட்டி சடச்சியிடம் சென்று, தங்களின் உறவினர் வீட்டிற்கு வந்தால் புதிய துணி தருவதாக கூறி ஆட்டோவில் ஏற்றினர். ஆனால், வீட்டுக்கு செல்லாமல் கன்னியாகுமரி, கொட்டாரம், நாகர்கோவில், கோட்டார், சொத்தவிளை போன்ற பகுதிகளில் ஆட்டோவில் சுற்றினர். ஆட்டோவில் இருக்கும் போது, சடச்சியிடம் இருந்த பணம் முழுவதையும் பறித்தனர். பின்னர், சடச்சியின் காதில் கிடந்த கம்மலை துளசி பறித்தார். அப்போது, அவர் ‘திருடன்... திருடன்...’ என கூச்சலிட்டார். உடனே, மந்திரமூர்த்தியும், சிங்ககுமாரும் சேர்ந்து சடச்சியின் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், பிணத்தை சொத்தவிளை கடற்கரையில், தென்னந்தோப்பில் வீசி விட்டு சென்றனர். சடச்சியின் செல்போனை மந்திர மூர்த்தி எடுத்து கொண்டார். அவர் செல்போனை சுவிட் ஆப் செய்து பத்திரமாக வைத்திருந்தார். இதுதொடர்பாக போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தியும் துப்பு துலங்காமல் இருந்தது.

நீண்ட நாட்களாக சிக்காமல் இருந்ததால் கொலையாளிகள் சுதந்திரமாக சுற்றத்தொடங்கினர். சில நாட்களுக்கு முன்பு மந்திரமூர்த்தி செல்போனை ஆன் செய்து பயன்படுத்த தொடங்கினார். இதையடுத்து செல்போன் சிக்னல் மூலம் போலீசார் துப்பு துலக்கி சென்று மந்திர மூர்த்தி, துளசி, சிங்ககுமார் ஆகிய 3 பேரையும் பிடித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேற்கூறிய தகவல்கள் தெரிய வந்தன.

இதையடுத்து மந்திரமூர்த்தி, அவரது மனைவி துளசி, சிங்ககுமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆட்டோ, சடச்சியிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணம் ஆகியவற்றை மீட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோ சிங்ககுமாருக்கு சொந்தமானது ஆகும். மேலும், தலைமறைவாக உள்ள ஆட்டோ டிரைவர் நல்லமுத்து குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story