2,791 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்


2,791 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 29 Jan 2018 4:00 AM IST (Updated: 29 Jan 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் 2,791 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் இதனை மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

வேலூர்,

போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதம் குழந்தைகளுக்கு ஏற்படாமல் இருக்க தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நாடு முழுவதும் கடந்த பல ஆண்டுகளாக 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான முதல் கட்ட முகாம் நேற்று நடந்தது.

வேலூர் மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 3 லட்சத்து 74 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் 70 முகாம்கள் பஸ் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களிலும், 14 முகாம்கள் போக்குவரத்து குறைவான மலைப்பகுதிகளிலும், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 3 சுங்கச்சாவடிகளிலும் மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என மாவட்டத்தில் 2 ஆயிரத்து 791 மையங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

வேலூர் ஓல்டு டவுன் உத்திரமாதா நடுநிலைப்பள்ளியில் நடந்த முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் குத்து விளக்கேற்றி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார். இதில் வேலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ், தாசில்தார் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் 8 ஆயிரத்து 324 பணியாளர்கள், 274 மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் போலியோ சொட்டு மருந்து முகாமின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக நலம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பலர் தங்களது குழந்தைகளை ஆர்வமுடன் முகாமிற்கு கொண்டு வந்து சொட்டு மருந்து வழங்கினர்.

விடுபட்ட குழந்தைகளுக்கு அடுத்த ஒரு வார காலத்திற்கு அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போலியோ சொட்டு மருந்துகள் வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2–ம் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் மார்ச் மாதம் 11–ந் தேதி நடைபெறுகிறது.


Next Story