சேவை மனப்பான்மையுடன் வக்கீல்கள் பணியாற்ற வேண்டும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு


சேவை மனப்பான்மையுடன் வக்கீல்கள் பணியாற்ற வேண்டும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 29 Jan 2018 4:15 AM IST (Updated: 29 Jan 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

சேவை மனப்பான்மையுடன் வக்கீல்கள் பணியாற்ற வேண்டும் என்று சேலத்தில் நடந்த விழாவில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசினார்.

சேலம்,

சேலம் வக்கீல் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், சேலம் மாவட்ட குற்றவியல் வக்கீல் சங்க முன்னாள் தலைவரும், தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டமைப்பு இணை செயலாளருமான வக்கீல் வி.ஆர்.சந்திரசேகரன், 50 ஆண்டு கால வக்கீல் தொழில் நிறைவு பெற்று பணியாற்றி வருகிறார்.

அவரை கவுரவிக்கும் வகையில் சேலம் வக்கீல் சங்கம் சார்பில் வக்கீல் வி.ஆர்.சந்திரசேகரனின் பொன்விழா நிகழ்ச்சி சேலம் அழகாபுரத்தில் உள்ள தெய்வீகம் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு வக்கீல் சங்க தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கே.ஆர்.ஆர்.அய்யப்பமணி வரவேற்றார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கலந்து கொண்டு, வக்கீல் வி.ஆர்.சந்திரசேகரனின் உருவப்படத்தை திறந்து வைத்தார். இதையடுத்து விழாவில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியதாவது:-

ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று நான் தமிழகத்திற்கு முதன் முதலாக வந்த போது இங்குள்ள இலக்கியம், கலை, பாரம்பரியம், கட்டிட கலை உள்ளிட்டவை என்னை மிகவும் கவர்ந்தது. சேலத்துடன் சட்ட தொழில் ரீதியாக முதல் தொடர்பு சேலம் உருக்காலை சம்பந்தப்பட்ட ஒரு வழக்கு ஆகும்.

சேலம் வக்கீல் சங்கம் தொடங்கி 220 ஆண்டுகள் ஆகிறது. பாரம்பரியமிக்க இந்த வக்கீல் சங்கம் நீதித்துறை வளர்ச்சியில் தனது பங்களிப்பை கொடுத்துள்ளது. கிரிமினல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று நாடு முழுவதும் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் சேலம் வக்கீல் சங்கம் மட்டும் இந்த பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தை நாடியது. இது எல்லோருக்கும் ஒரு முன்மாதிரியான அணுகுமுறையாகும்.

45 ஜூனியர் வக்கீல்களை உருவாக்கிய வக்கீல் வி.ஆர்.சந்திரசேகரன். இவர் மேலும் பல ஜூனியர்களை உருவாக்கிட வேண்டும். கோர்ட்டில் வக்கீல்கள் பணிவாக இருப்பதால் எந்த விதத்திலும் அவர்கள் கீழானவர்கள் அல்ல. வக்கீல்கள் வாதங்களை ஆணித்தரமாக யாரையும் புன்படுத்தாத வகையில் எடுத்து வைக்க வேண்டும். எங்கெல்லாம் சரியான வாதம் எடுத்து வைக்கப்படுகிறதோ, அங்கு சரியான நீதி வழங்கப்படும். வக்கீல்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு இந்திரா பானர்ஜி பேசினார்.

சேலத்தில் ஐகோர்ட்டு கிளை அமைக்க வேண்டும் என்று சேலம் வக்கீல் சங்கம் சார்பில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இந்த விழாவில் நீதிபதிகள் தங்கவேல், அக்பர் அலி, கலையரசன், ராஜமாணிக்கம், மோகன்ராஜ், தீனதயாளன், மூத்த வக்கீல் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வக்கீல் சங்க துணைத்தலைவர் ரமணி நன்றி கூறினார். முன்னதாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை மாவட்ட கலெக்டர் ரோகிணி மலர்கொத்து கொடுத்து வரவேற்றார்.


Next Story