கனகும்பியில் தடுப்பணை கட்டும் பணி நடைபெறவில்லை முதல்-மந்திரி பேட்டி


கனகும்பியில் தடுப்பணை கட்டும் பணி நடைபெறவில்லை முதல்-மந்திரி பேட்டி
x
தினத்தந்தி 29 Jan 2018 5:41 AM IST (Updated: 29 Jan 2018 5:41 AM IST)
t-max-icont-min-icon

கோவா அரசின் குற்றச்சாட்டு தவறானது என்றும், கனகும்பி பகுதியில் தடுப்பணை கட்டும் பணி நடைபெறவில்லை என்றும் முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கனகும்பியில் கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்திற்காக தடுப்பணை கட்டுவதாக குற்றம்சாட்டும் கோவா அரசு, நேற்று அந்த மாநில சபாநாயகர் தலைமையில் கனகும்பி பகுதியில் ஆய்வு நடத்தியது. இதுகுறித்து பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவா சபாநாயகர் தலைமையிலான குழுவினர் கனகும்பியில் ஆய்வு நடத்தியுள்ளனர். அவர்களை தடுக்க வேண்டாம் என்றும், அந்த குழுவினருக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு தெரிவித்தேன். ஆனால் கனகும்பி பகுதியில் ஆய்வு செய்வதற்காக கர்நாடக அரசிடம், கோவா குழுவினர் முன் அனுமதி எதுவும் பெறவில்லை. என்றாலும், நியாயமான முறையில் கோவா குழுவினரை ஆய்வு செய்வதை தடுக்க வேண்டாம் என்று அதிகாரிகளிடம் கூறினேன். கனகும்பியில் தடுப்பணை கட்டுவதாக கோவா அரசு கூறும் குற்றச்சாட்டு தவறானது. அதுபோன்ற தடுப்பணை கட்டும் பணி நடைபெறவில்லை. எந்த விதிமுறைகளையும் அரசு மீறவில்லை.

மகதாயி நடுவர் மன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் ஆஜராகி வரும் மூத்த வக்கீல் பாலி நாரிமனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் அவருக்கு பதிலாக வேறு ஒரு மூத்த வக்கீல் ஆஜராகி கர்நாடக அரசின் வாதங்களை முன் வைப்பார். ஆனாலும் பாலி நாரிமனிடம் வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு, அவரது கருத்தும் கேட்கப்படும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார். 

Next Story