பஸ் கட்டணம்: தி.மு.க., கூட்டணி கட்சியினர் சாலை மறியல், 1,324 பேர் கைது


பஸ் கட்டணம்: தி.மு.க., கூட்டணி கட்சியினர் சாலை மறியல், 1,324 பேர் கைது
x
தினத்தந்தி 30 Jan 2018 4:30 AM IST (Updated: 30 Jan 2018 12:18 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க., கூட்டணி கட்சியினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட 1,324 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி,

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் நடந்தது. தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே வடக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ரமேஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அழகுமுத்துப்பாண்டியன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது அவர்கள், அங்கிருந்து காய்கறி மார்க்கெட் ரவுண்டானா நோக்கி வேகமாக சென்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கீதாஜீவன் எம்.எல்.ஏ. உள்பட 270 பேரை மத்திய பாகம் போலீசார் கைது செய்தனர்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குறுக்குச்சாலையில் தூத்துக்குடி-மதுரை நான்கு வழிச்சாலையில் நடந்த போராட்டத்துக்கு ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிசுவநாதன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் முத்துக்குமார், மாவட்ட பிரதிநிதி சத்தியராஜ், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பார்த்தசாரதி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, விஜயபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மணியாச்சி போலீஸ் சூப்பிரண்டு திருஞானசம்பந்தம் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 64 பேரை கைது செய்தனர்.

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நேற்று காலையில் சாலைமறியல் நடந்தது. தி.மு.க. நகர செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா, பொதுக்குழு உறுப்பினர் பாண்டியன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர், வர்த்தக அணி ராஜகுரு, இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் சரோஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் முருகன், மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் உமாசங்கர், ம.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் பவுன் மாரியப்பன், நகர இளைஞர் அணி செயலாளர் லவராஜா, பொதுக்குழு உறுப்பினர் தெய்வேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலைமறியலில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 160 பேரை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோன்று கோவில்பட்டி- எட்டயபுரம் ரோடு தொழிற்பேட்டை முன்பு தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகேசன், ஒன்றிய துணை செயலாளர்கள் சந்தனம், பச்சமால், விவசாய அணி சந்தனம், மகளிர் அணி விஜயலட்சுமி, வட்டார காங்கிரஸ் தலைவர் ரமேஷ்மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் பாபு, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, திட்டங்குளம் பஞ்சாயத்து செயலாளர் தம்பித்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 123 பேரை கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பிருந்து தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் ஏராளமானவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு சென்று, பகத்சிங் பஸ் நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மாநில மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர்கள் செங்குழி ரமேஷ் (திருச்செந்தூர்), பாலசிங் (உடன்குடி), நவீன் (ஆழ்வார்திருநகரி), நகர செயலாளர்கள் மந்திரமூர்த்தி (திருச்செந்தூர்), ராமஜெயம் (தென்திருப்பேரை), ராஜசேகர் (ஆறுமுகநேரி), ஜான் பாஸ்கர் (உடன்குடி), ரவி செல்வகுமார் (நாசரேத்), முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் கல்யாணசுந்தரம்,

ஐ.என்.டி.யு.சி. மாவட்ட செயலாளர் லோகநாதன், வட்டார காங்கிரஸ் தலைவர் சற்குரு, வக்கீல் குருராமன், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட குழு உறுப்பினர் நடேச ஆதித்தன், மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன், எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலை செழியன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வித்யா சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலைமறியலில் ஈடுபட்ட 77 பெண்கள் உள்பட 449 பேரை திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

கயத்தாறு நகர பஞ்சாயத்து அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க. ஒன்றிய செயலாளர் சின்னபாண்டியன், நகர செயலாளர் சுடலைமணி, வட்டார காங்கிரஸ் தலைவர் செல்லத்துரை, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கொம்பையா பாண்டியன், நகர செயலாளர் கட்டபொம்மு முருகன் உள்பட 160 பேரை கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

எட்டயபுரம் பஸ் நிலையம் முன்பு சாலைமறியல் போராட்டம் நடந்தது. தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன், ம.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், நகர செயலாளர் காளிதாஸ், இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 98 பேரை எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையா கைது செய்தார்.

Next Story