கலெக்டர் அலுவலகத்தில் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு


கலெக்டர் அலுவலகத்தில் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Jan 2018 4:30 AM IST (Updated: 30 Jan 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. சேலம் ஜாகீர் அம்மாபாளையம் கண்ணகி தெருவை சேர்ந்தவர் பூங்கொடி(வயது 35) என்பவர் கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்த அவர் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவரை அங்கிருந்த போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு போலீசார் பூங்கொடியிடம் விசாரித்தனர்.

எனது கணவர் இறந்து 9 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். இந்த வாடகை வீடு மாமாங்கத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வீட்டை ரூ.15 லட்சத்துக்கு விற்பதாக என்னிடம் அவர் கூறினார். இதையடுத்து வீட்டை வாங்குவதற்காக நான் முன்பணமாக ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் அவரிடம் கொடுத்தேன்.

மீதி பணத்தை சில மாதங்களில் கொடுத்துவிடுவதாக தெரிவித்தேன். ஆனால் இந்த வீட்டை எனக்கு தெரியாமல் வேறு ஒருவருக்கு அவர் விற்றுவிட்டார். மேலும் அவர் உள்பட 3 பேர் என்னை வீட்டை காலி செய்யுமாறு மிரட்டியதுடன் தாக்கினர். அவர்கள் மீது சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த நான் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்றேன். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Next Story