பஸ் கட்டண உயர்வை கண்டித்து த.மா.கா.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


பஸ் கட்டண உயர்வை கண்டித்து த.மா.கா.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2018 4:30 AM IST (Updated: 30 Jan 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி, ஓசூரில் த.மா.கா.வினர் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் கிழக்கு மாவட்ட த.மா.கா. சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர்கள் காசிலிங்கம், தசரதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட மகளிர் அணி தலைவி தேன்மொழி, மாவட்ட இளைஞரணி தலைவர் சரவணன், மாவட்ட துணைத்தலைவர் பெரியசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் பழனிகுமார், யோகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் சத்தியநாராயணன் வரவேற்று பேசினார்.

இதில் மாவட்ட பொறுப்பாளர் குலோத்துங்கன் கலந்து கொண்டு பேசினார். இதில் வட்டார தலைவர்கள் சின்னதம்பி, காளியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஜெயராஜ் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தின் போது, பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். கிருஷ்ணகிரி டோல்கேட் முதல் கீழ்புதூர் ஏரி வரை தேசிய நெடுஞ்சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும். நகராட்சி பகுதியில் கட்டிட வரியை தாங்களாகவே அதிக அளவில் உயர்த்தி, அதை குறைப்பதற்காக லஞ்சம் பெறுவதை தடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு த.மா.கா. மேற்கு மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில், மாநில செயலாளர் டாக்டர் சிவானந்தம் கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்ட, நகர, வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். தமிழக மீனவர்களின் நலன் காக்க வேண்டும். விவசாயிகளின் கடன் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் நிர்வாகிகள், ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். 

Next Story