தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2018 4:30 AM IST (Updated: 30 Jan 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பஸ்கட்டண உயர்வை கண்டித்து தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில பொருளாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தம்பி ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் குமார் வரவேற்றார்.

ஏழை,எளிய மக்களை பாதிக்கும் பஸ் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி குதிரை வண்டியுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் மாவட்டதுணை செயலாளர்கள் மணிமுனியப்பன், தனபால், கோபிநாத், செல்வி, மாவட்ட பொருளாளர் சவுந்திரராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது கட்சி தொண்டர்களில் ஒரு பகுதியினர் அந்த பகுதியில் உள்ள சாலையின் முன்பகுதிக்கு வந்தனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமாருக்கும் கட்சி நிர்வாகிகளில் சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த நூற்றுக்கணக்கான கட்சி தொண்டர்கள் தர்மபுரி-சேலம் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து தடைபட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு காந்தி அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து சாலைமறியலை கைவிட்ட தே.மு.தி.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பஸ் கட்டணம் உயர்விற்கு கண்டனம் தெரிவித்தும், பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தே.மு.தி.க. துணை செயலாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரன், கிருஷ்ணகிரி ஒன்றிய செயலாளர் வஜ்ஜிரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பரந்தாமன் வரவேற்று பேசினார்.

இதில் மாவட்ட அவைத் தலைவர் சீனிவாசன், மாவட்ட பொருளாளர் ராமலிங்கம், முன்னாள் மாநில இளைஞரணி துணை செயலாளர் அன்பரசன், தலைமை கழக பேச்சாளர் மூர்த்தி மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஏழை, எளிய மக்களை மிகவும் பாதிக்கும் இந்த பஸ் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர அவைத்தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார். 

Next Story