பணம் கொடுத்து அரசு வேலையில் சேருபவர்கள் எப்படி நேர்மையாக பணியாற்றுவார்கள்? மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி


பணம் கொடுத்து அரசு வேலையில் சேருபவர்கள் எப்படி நேர்மையாக பணியாற்றுவார்கள்? மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி
x
தினத்தந்தி 31 Jan 2018 3:30 AM IST (Updated: 31 Jan 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

பணம் கொடுத்து அரசுப்பணிகளில் சேருபவர்கள் எப்படி நேர்மையாக பணியாற்றுவார்கள் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மதுரை,

மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து பதிவு செய்துள்ள பொதுநல வழக்கு மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

கடந்த சில நாட்களுக்கு முன்பு டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி. போன்ற போட்டித்தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதாகவும், லஞ்சம் கொடுத்து தேர்வு எழுதுபவர்கள் தேர்ச்சி பெறுவதாகவும் பத்திரிகையில் செய்திகள் வெளியாயின. இந்த முறைகேடுகள் குறித்து பாதிக்கப்பட்ட நபர் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிய புகாரின் அடிப்படையில் ஏராளமானவர்கள் தவறான வழியில் தேர்வானவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தவறான முறையில் மதிப்பெண்களை பெற்றதுடன், தகுதியுடைய நபர்களின் இடங்களையும் பறித்துள்ளனர். சமுதாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த சம்பவம் குறித்து கோர்ட்டு தானாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்து விசாரிக்கிறது.

போட்டித்தேர்வுகளை முறைப்படுத்தவும், முறைகேடுகள் நடப்பதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போட்டித்தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள் மீதான விசாரணையை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் அல்லது அவை தொடர்பான விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “பணம் கொடுத்து அரசு பணிகளில் சேருபவர்கள் எப்படி நேர்மையாக பணியாற்றுவார்கள்?“ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர், இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், அவுட்சோர்சிங் முறைப்படி நடந்த எல்லா தேர்வுகளிலும் இந்த முறைகேடுகள் நடந்து இருக்குமோ என்று சந்தேகம் எழுப்பினர்.

இதுபோன்ற தேர்வு முறைகேடுகள் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அந்த வழக்கு விசாரணைகளின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து தமிழக தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். 

Next Story