அரசு வேலைக்காக திருமணத்தை மறைத்த வழக்கு: தாய், மகள் உள்பட 4 பேருக்கு 2 ஆண்டு சிறை


அரசு வேலைக்காக திருமணத்தை மறைத்த வழக்கு: தாய், மகள் உள்பட 4 பேருக்கு 2 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 31 Jan 2018 3:45 AM IST (Updated: 31 Jan 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

அரசு வேலைக்காக திருமணத்தை மறைத்த வழக்கில் தாய், மகள் உள்பட 4 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சேலம்,

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ். அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் கடந்த 1992-ம் ஆண்டு இறந்தார். இவருடைய 2-வது மகள் அகல்யா, வாரிசு அடிப்படையில் அரசு வேலைக்காக தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் சான்றிதழ் பெற்றார்.

அதை வைத்து செந்தாரப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக கடந்த 2005-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார். இதற்கிடையில், அகல்யா போலியான ஆவணம் கொடுத்து அரசு வேலை வாங்கியதாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது.

2 ஆண்டு சிறை

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அகல்யாவிற்கு கடந்த 1994-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ந் தேதி பாஸ்கரன் என்பவருடன் திருமணம் நடந்ததும், சான்றிதழ் பெறுவதற்காக செல்வராணியிடம் இருந்து கெங்கவல்லி கிராம நிர்வாக அலுவலர் அண்ணாதுரை ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலியான ஆவணம் தயாரித்து ஏமாற்றியதாக அண்ணாதுரை(வயது 57), வருவாய் ஆய்வாளர் ராமலிங்கம், மாவட்ட கல்வி அதிகாரி முத்து, அகல்யா(44), அவருடைய தாய் செல்வராணி(65), இவருடைய உறவினர் மனோகர்(56) ஆகிய 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சேலம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்தது. வழக்கு விசாரணையின் போது ராமலிங்கம் இறந்து விட்டார். இந்த வழக்கில் நீதிபதி மோகன் நேற்று தீர்ப்பு கூறினார். இதில் குற்றம் சாட்டப்பட்ட அகல்யா, அவருடைய தாய் செல்வராணி, அண்ணாமலை, மனோகர் ஆகிய 4 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.9 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மோகன் உத்தரவிட்டார். முத்து விடுதலை செய்யப்பட்டார். 

Next Story