100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்


100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2018 4:15 AM IST (Updated: 31 Jan 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரி கும்பகோணம் ஒன்றிய அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

கும்பகோணம்,

100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும், 100 நாள் வேலைதிட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் ஒன்றிய அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு கும்பகோணம் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தெட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் நாகமுத்து, கலையரசன், அறிவுராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தை முடக்கும் செயலை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை உறுதி செய்து, தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சேதுபாவாசத்திரம்

சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். இதில் 200-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

ஒரத்தநாடு

ஒரத்தநாடு ஒன்றிய அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார், கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மனு

100 நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஒரத்தநாடு வட்டார வளர்ச்சி அதிகாரிகள் முருகன், விஜய் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. முன்னதாக வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. போராட்டத்தையொட்டி ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிதாசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் பாரதிதாசன் மற்றும் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பாபநாசம்

அதேபோல மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் விவசாய தொழிலாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க பாபநாசம் ஒன்றிய செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் விஸ்வநாதன், துணை தலைவர் மாலதி, ஒன்றியகுழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

திருவிடைமருதூர்

திருவிடைமருதூர் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று விவசாய தொழிலாளர்கள், 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க நிர்வாகி சங்கர் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஜீவபாரதி, மாவட்டக்குழு உறுப்பினர் பக்கிரிசாமி, சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை தலைவர் நாகேந்திரன், ஒன்றிய செயலாளர் சின்னைபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோரிக்கையை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் ஒன்றிய ஆணையர்கள் குமார், உமா ஆகியோரிடம் மனு அளித்தனர். 

Next Story