விவசாயி, ஆசிரியர் வீடுகளில் 31½ பவுன் நகை- ரூ.2 லட்சம் திருட்டு


விவசாயி, ஆசிரியர் வீடுகளில் 31½ பவுன் நகை- ரூ.2 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 31 Jan 2018 3:45 AM IST (Updated: 31 Jan 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

விவசாயி, ஆசிரியர் வீடுகளில் பூட்டை உடைத்து 31½ பவுன் நகை- ரூ.2 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள தி.கீரனூரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 55). விவசாயி. இவர் நேற்று காலை தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வயலுக்கு சென்றார். இந்நிலையில் பெரம்பலூருக்கு சென்றிருந்த பெரியசாமியின் மகள் பரிமளா மதியம் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 14½ பவுன் தங்க நகை, ரூ.8 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

ஆசிரியர்

இதேபோல் திருமாந்துறை நோவா நகரை சேர்ந்தவர் அருள்ஜோதி (39). இவர் நன்னை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கவிதாவும், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு கணவன்-மனைவி இருவரும் பள்ளிக்கு வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் மாலையில் இருவரும் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 17 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பெரியசாமி, அருள்ஜோதி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story