தைப்பூச திருவிழாவை முன்னிட்டு காட்டிநாயனப்பள்ளி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை


தைப்பூச திருவிழாவை முன்னிட்டு காட்டிநாயனப்பள்ளி சுப்பிரமணிய சுவாமி  கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 1 Feb 2018 6:00 AM IST (Updated: 1 Feb 2018 5:48 AM IST)
t-max-icont-min-icon

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி, வரட்டனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, ஒரப்பம், கந்திகுப்பம், காவேரிப்பட்டணம், பெரியமுத்தூர், சின்னமுத்தூர், பாலகுறி, மாதேப்பட்டி, ஆலப்பட்டி, குந்தாரப்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலையிலேயே பக்தர்கள் வந்திருந்தனர்.

நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

பக்தர்கள் பலர் காவடி எடுத்தும்,       பால்  குடம் எடுத்தும் வந்ததுடன், அலகு குத்தியவாறும் கோவிலுக்கு வந்து சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். விழாவை முன்னிட்டு கோவிலின் அருகில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

வழக்கமாக மாலை நடைபெறும் சாமி வீதி உலா நிகழ்ச்சி சந்திர கிரகணத்தையொட்டி காலையில் நடந்தது. அதன்படி நேற்று காலை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுப்பிரமணிய சாமி வீதி உலா வந்தார். வீதியெங்கும் பக்தர்கள் சாமியை வழிபட்டனர். விழாவையொட்டி கிருஷ்ணகிரி டவுன் மற்றும் தாலுகா போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இதே போன்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோவில்களிலும் தைப்பூசத்தை யொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story