கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான பள்ளி கலைத்திருவிழா அமைச்சர் தொடங்கி வைத்தார்


கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான பள்ளி கலைத்திருவிழா அமைச்சர் தொடங்கி  வைத்தார்
x
தினத்தந்தி 1 Feb 2018 6:15 AM IST (Updated: 1 Feb 2018 5:48 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான பள்ளி கலைத்திருவிழா நடைபெற்றது. இதில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி டான் போஸ்கோ மெட்ரிக் மேல்
நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி கலைத்
திருவிழா நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி அனைவரையும் வரவேற்று பேசினார். அசோக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்துடன், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தனித்திறமைகள்

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், பாரம்பரிய
கலாசாரம், கலை, பண்பாடு ஆகியவற்றை பேணிக்காக்கும் வகையிலும், எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்ளும் வகையிலும் பள்ளி கல்வித்துறை சார்பில் நமது மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் பல ஆண்டுகளாக கலைகளை போற்றி வந்ததையும், சங்கம் வைத்த தமிழ்மொழியை வளர்த்து வந்ததையும், தமிழ் இலக்கியங்கள் மூலமாக நாம் அறிகிறோம். தமிழ் மொழியை இயல், இசை, நாடகம் என முத்தமிழாக்கி போற்றியவர்கள் நம் தமிழர்கள் தான்.

நலிந்து போன கலைகளை மீண்டும் புதுப்பித்து நமது பள்ளிக் கல்வித் துறையின் மூலமாக வெளிப்படுத்தி ஒவ்வொரு மாணவ, மாணவிகளில் ஒளிந்திருக்கும் பல்வேறு தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்.

பாரம்பரிய கலைகளை மீளப்பெறும் வகையில் பள்ளி
கல்வித் துறை சார்பில் இது போன்ற கலைத் திருவிழாவை தமிழக அரசு நடப்பாண்டு முதல் தொடர்ந்து நடத்த ஆணையிட்டுள்ளது. இந்த கலைத் திருவிழாவை திறம்பட நடத்துவதற்கு ஆசிரியர்
களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

91 வகையான போட்டிகள்

இவ்விழாவில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, நாட்டுப்புற நடனம், கும்மி, வில்லுப்பாட்டு, நாதஸ்வரம் உள்ளிட்ட 91 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது. நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த பாரம்பரிய கலைகளை நாம் பேணிக்காக்கும் வகையில் இது போன்ற கலைநிகழ்ச்சிகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு
திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மொத்தம் 392 மாணவர்கள் மாநில அளவில் சென்னையில் நடைபெற உள்ள 68 வகையான கலை நிகழ்ச்சி போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் தர்மபுரி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் தென்னரசு, கிருஷ்ணகிரி நகர் மன்ற முன்னாள் தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் சுப்பிரமணியன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் சேகர், துணை ஆய்வாளர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட அலுவலர் அஹமத் பாஷா நன்றி கூறினார்.


Next Story