நண்பரின் மகளை கடத்தி கொலை செய்த செங்கல் சூளை அதிபருக்கு தூக்குத் தண்டனை


நண்பரின் மகளை கடத்தி கொலை செய்த செங்கல் சூளை அதிபருக்கு தூக்குத் தண்டனை
x
தினத்தந்தி 1 Feb 2018 1:00 AM GMT (Updated: 1 Feb 2018 12:43 AM GMT)

கொடுக்கல் வாங்கல் தகராறில் நண்பரின் மகளை கடத்திச்சென்று கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய செங்கல் சூளை அதிபருக்கு தூக்குத் தண்டனை விதித்து திருவண்ணாமலை மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் மேல்பாலானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம், விவசாயி. இவரது மனைவி உஷா. இவர்களது மகள்கள் பச்சையம்மாள் (வயது 4), விஜயலட்சுமி (1½). இவர்களில் பச்சையம்மாள், மங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தாள். பரமசிவத்தின் நண்பர் மணிகண்டன் (28). அவர் பாலானந்தல் பகுதியில் செங்கல் சூளை நடத்தி வந்தார். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பரமசிவத்திற்கும், மணிகண்டனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதற்கிடையில் 2013-ம் ஆண்டு ஜூன் 10-ந் தேதியன்று பள்ளிக்கு சென்ற பச்சையம்மாள் வீடு திரும்பவில்லை. அவள் திடீரென மாயமானாள். தந்தை பரமசிவம் மற்றும் உறவினர்கள் பல இடத்தில் தேடியும் பச்சையம்மாள் கிடைக்கவில்லை. அவர்களுடன் மணிகண்டனும் ஒன்றும் தெரியாதவர்போல் பச்சையம்மாளை தேடுவதாக நடித்தார்.

இதனை தொடர்ந்து மகள் மாயமானது குறித்து மங்கலம் போலீஸ் நிலையத்தில் பரமசிவம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


இதற்கிடையே 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ந் தேதி ஆர்ப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் பள்ளி சீருடை அணிந்த நிலையில் சிறுமியின் உடல் கிடப்பதாக பரமசிவத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் அங்கு சென்று பார்த்தபோது பிணமாக கிடந்தது பச்சையம்மாள் என்பது தெரியவந்தது.

பின்னர் சிறுமியின் உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த வழக்கை போலீசார் கொலை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சிறுமி பச்சையம்மாள் பள்ளியிலிருந்து வீடு திரும்பியபோது அவளை மணிகண்டன் அழைத்து சென்றதாக பள்ளி நிர்வாகிகளும், சிறுமியின் பெரியப்பா மகனும் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து மணிகண்டனை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர்.

தன்னை கைது செய்ய வர உள்ள தகவல் அறிந்த மணிகண்டன் தலைமறைவானார். எனினும் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரமசிவம் மீது ஏற்பட்ட முன்விரோதத்தால் அவரது மகள் பச்சையம்மாளை கடத்திச் சென்று கொலை செய்து உடலை கிணற்றில் வீசியது தெரியவந்தது.


இது குறித்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு வக்கீல் அர்ச்சனா ஆஜராகி வாதிட்டார். விசாரணை முடிந்த நிலையில் மகளிர் கோர்ட்டு நீதிபதி (பொறுப்பு) மகிழேந்தி நேற்று தீர்ப்பு கூறினார்.

தீர்ப்பில் “சிறுமியை கடத்தி கொலை செய்த குற்றத்திற்காக கடத்தல் வழக்கு பிரிவு 364 ஏ-யின் படி குற்றவாளி மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் 3 ஆண்டு சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்றும், கொலை வழக்கு பிரிவு 302-ன் படி மணிகண்டனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதாகவும்” தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து குற்றவாளி மணிகண்டனை போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு பின் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.

திருவண்ணாமலை மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை விதித்தது இதுவே, முதல் முறை என்று கூறப்படுகிறது. இதனால் திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story