பெண் போலீஸ் தற்கொலை வழக்கில் சென்னை போலீஸ்காரருக்கு 10 ஆண்டு சிறை


பெண் போலீஸ் தற்கொலை வழக்கில் சென்னை போலீஸ்காரருக்கு 10 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 1 Feb 2018 1:30 AM GMT (Updated: 1 Feb 2018 1:14 AM GMT)

பெண் போலீஸ் தற்கொலை வழக்கில் சென்னை போலீஸ்காரருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

செங்கல்பட்டு,

பண்ருட்டி தாலுகா சென்னகுப்பம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கபில்தேவ் (வயது 27). திருச்சியை சேர்ந்தவர் ஷர்மிளாபானு (26).

இருவரும் சென்னை மவுண்ட் போலீஸ் நிலையத்தில் போலீசாராக வேலை பார்த்து வந்தனர். கடந்த 2015-ம் ஆண்டு ஷர்மிளாபானு தான் தங்கியிருந்த அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதையடுத்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் மவுண்ட் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பெண் போலீஸ் ஷர்மிளாபானு 4 மாதம் கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது. மேலும் அவரது செல்போனை தொடர்பு கொண்டு 4 பேர் தொடர்ந்து பேசி வந்ததும் தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். மேலும் டி.ஏன்.ஏ. சோதனையும் நடத்தப்பட்டது.

விசாரணையில் போலீஸ்காரர் கபில்தேவ், ஷர்மிளாபானுவை காதலித்து திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அவருடன் உல்லாசமாக இருந்ததும், பின்னர் அவரை திருமணம் செய்யாமல் ஏமாற்றி தற்கொலைக்கு தூண்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து கபில்தேவ் மீது செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, பெண் போலீஸ் ஷர்மிளாபானுவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கபில்தேவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார். 

Next Story