சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்


சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 1 Feb 2018 6:45 AM IST (Updated: 1 Feb 2018 6:45 AM IST)
t-max-icont-min-icon

சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

கரூர்,

கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். இதில் மொஞ்சனூர் சந்திரசேகர் பேசுகையில், “விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு பஸ் கட்டணம் வழங்க வேண்டும். பஸ் கட்டண உயர்வால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பஸ் பாஸ் வழங்க வேண்டும்” என்றார். குப்புச்சிபாளையம் சந்திரசேகர் பேசுகையில், “உழவர் சந்தைகளில் காய்கறிகள் விலை மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகிறது. ஒட்டன்சத்திரத்தில் காய்கறிகள் விலைக்கும், கரூர் உழவர் சந்தையில் காய்கறிகள் விலைக்கும் வித்தியாசம் உள்ளது. காய்கறிகளின் விலையை விவசாயிகள் நிர்ணயம் செய்ய அனுமதிக்க வேண்டும். பக்கத்து ஊர்களில் உள்ள உழவர் சந்தைகளில் விலையை பட்டியலில் எழுத வேண்டும்” என்றார்.

சீமைக்கருவேல மரங்கள்

பஞ்சப்பட்டி அழகப்பன் பேசுகையில், ‘பஞ்சப்பட்டி குளத்தில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். கவுண்டம்பட்டி சுப்ரமணியன் பேசுகையில், “காவிரியில் பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை குடிநீர் தேவைக்காகவும், பாசனத்திற்காகவும் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும். கட்டளை மேட்டு வாய்க்கால் கடைமடை பகுதிக்கு நீர் செல்வதை கண்காணிக்க வேண்டும். கட்டளை மேட்டு வாய்க்காலில் மாயனூர் முதல் தாயனூர் வரை தூர்வார அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். காவிரியில் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும்” என்றார்.

சாயக்கழிவால் பாதிப்பு

கருப்பம்பாளையம் ராமலிங்கம் பேசுகையில், “சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படாமல் உள்ளது. ரூ.6 கோடியே 36 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் வழங்கப்படவில்லை. சாயப்பட்டறை உரிமையாளர்களிடம் பணத்தை பெற்று மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும். அமராவதி கரையோரம் இருந்த சாயப்பட்டறைகள் பல மூடப்பட்டதால் அதன் உரிமையாளர்கள் தெரியவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்களது நிலம் அந்த இடத்தில் தான் உள்ளது. அந்த இடத்தை ஜப்தி செய்ய வேண்டும். செல்லாண்டிபாளையம் பகுதியில் சாயக்கழிவுகள் இன்னும் ஆற்றில் கலந்து கொண்டிருக்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். அப்போது சாயக்கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சிலர் மொத்தமாக எழுந்து நின்று பேசினர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இதேபோல் பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். மேலும் கலெக்டரிடம் மனு அளித்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து கலெக்டர் கோவிந்தராஜ் பேசுகையில், “விவசாயிகளுக்கு பஸ் பாஸ் வழங்குவது அரசின் கொள்கை முடிவாகும். உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விலை விவசாயிகள் 10 பேர் கொண்ட குழு மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. இதில் எந்தவித குளறுபடியும் இல்லை. பஞ்சப்பட்டி குளத்தை தூர்வார பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு பல முறை எடுத்து சொல்லப்பட்டுள்ளது. இனியும் காலம் தாழ்த்தினால் பொதுப்பணித்துறை பொறியாளர் மீது புகார் தெரிவித்து சென்னை தலைமை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்படும். காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும். கட்டளை மேட்டுவாய்க்கால் கடைமடை வரை காவிரி தண்ணீர் செல்வதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு வருகிறது. வாய்க்காலை தூர்வார அரசின் சிறப்பு நிதியை பெற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story