ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்


ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 1 Feb 2018 8:15 AM IST (Updated: 1 Feb 2018 7:40 AM IST)
t-max-icont-min-icon

ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

டெல்லி போன்ற யூனியன் பிரதேசத்தில் இருந்து புதுச்சேரி நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். ஆட்சி நிர்வாகத்தை அதிகாரிகள் விழிப்புடன் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நீர்நிலைகளை சிலர் நீண்ட காலமாக ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

இதனால் தண்ணீர் செல்வது தடைபடுகிறது. ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டிடங்களை கட்டி வைத்திருக்கும் பணக்காரர்கள் கோர்ட்டுக்கு சென்று தங்கள் மீதான நடவடிக்கைக்கு தடை ஆணைகளை பெற்று உள்ளனர். கோர்ட்டு தீர்ப்புகள் வெளியாக காலதாமதம் ஆவதால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் செல்வது தடைபடுகிறது.

இதனால் அந்த நீர்நிலைகளை நம்பி இருக்கும் இடங்களில் விவசாயம் பாதிக்கப்படுவதுடன் நிலத்தடி நீர்மட்டமும் குறைகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மிகுந்த பொருட்செலவும் ஏற்படுகிறது. இது சமுதாயத்துக்கு பேரிழப்பாக மாறுகிறது. ஏனெனில் இதற்காக செலவிடப் படுவது மக்கள் பணம். மற்றவர்களின் தவறுகளில் இருந்து புதுச்சேரி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

வருமுன் காப்பதே சிறந்தது. மக்கள் பிரதிநிதிகள் வருவார்கள், போவார்கள். ஆனால் அதிகாரிகள் அவ்வாறு கிடையாது. எனவே ஆக்கிரமிப்புகளை கண்காணிக்கும் பொறுப்பு அதிகாரிகளின் கைகளில்தான் உள்ளது. அதிகாரிகள் தவறு செய்யும்போது மற்றவர்களுக்கு துன்பம் ஏற்படும். அதே நேரத்தில் நல்லது செய்தால் மக்கள் பலன் அடைவார்கள்.

இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story