மாநில அரசு நிதி பங்களிப்பு அளித்தால் காரைக்கால்-பேரளம் ரெயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படும், தென்னக ரெயில்வே பொதுமேலாளர் பேட்டி


மாநில அரசு நிதி பங்களிப்பு அளித்தால் காரைக்கால்-பேரளம் ரெயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படும், தென்னக ரெயில்வே பொதுமேலாளர் பேட்டி
x
தினத்தந்தி 1 Feb 2018 8:00 AM IST (Updated: 1 Feb 2018 7:40 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மாநில அரசு நிதி பங்களிப்பு அளித்தால் காரைக்கால் - பேரளம் ரெயில்பாதை திட்டம் செயல்படுத்தப்படும் என்று காரைக்காலில் தென்னக ரெயில்வே பொதுமேலாளர் தெரிவித்தார்.

காரைக்கால்,

தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்செரஸ்தா நேற்று காரைக்காலுக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து தனி ரெயில் மூலம் காரைக்கால் ரெயில் நிலையம் வந்தார். அங்கு பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள், ரெயில்வே ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான வசதிகள், ரெயில் நிலையம் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார். மேலும், ஊழியர்களின் பதிவேடுகளை பார்வையிட்டார்.

அப்போது அங்கு வந்த அசனா எம்.எல்.ஏ., காரைக்கால் - பேரளம் அகல ரெயில் பாதை திட்டம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு ரூ.23.76 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆய்வு பணிகளுக்காக ரூ.10 லட்சமும் ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் திருநள்ளாறுக்கு நேரடியாக செல்ல முடியும். அதுபோன்று திருநள்ளாறு - தரங்கம்பாடி-திருக்கடையூர்- ஆக்கூர்- சீர்காழி ரெயில் பாதை திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும். காரைக்கால் ரெயில் நிலையம் அருகில் உள்ள டி.கே.நகர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்காத வகையில் சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதேபோல் காரைக்கால் வர்த்தகர் சங்கம், மஞ்சக்கொல்லை முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் உள்பட பல்வேறு அமைப்பினர் தெற்கு ரெயில்வே பொதுமேலாளரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து பொதுமேலாளர் ஆர்.கே.குல்செரஸ்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காரைக்கால் ரெயில் நிலையம் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. காரைக்கால் பகுதி சிறந்த சுற்றுலாத்தலமாகவும், ஆன்மிக தலமாகவும் விளங்கி வருகிறது. மேலும் காரைக்காலை சுற்றி திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில், நாகூர் ஆண்டவர் தர்கா, வேளாங்கண்ணி மாதா பேராலயம் போன்ற கோவில்களும், வரலாற்று சிறப்புமிக்க இடங்களும் அமைந்துள்ளதால் இங்கு பல்வேறு வளர்ச்சிப்பணிகள் செய்யப்பட்டுள்ளது.

எந்தவொரு திட்டத்தை நிறைவேற்றுவதாக இருந்தாலும் அந்த மாநிலத்தின் பங்களிப்புடன்தான் நிறைவேற்ற முடியும். எனவே, காரைக்கால் - பேரளம் அகல ரெயில் பாதை திட்டத்திற்கு புதுச்சேரி மாநில அரசு நிதி பங்களிப்பு அளித்தால் அந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வு பணியில் முதன்மை தலைமை பொறியாளர்கள் வி.டி.எஸ்.கஸ்வான், பிரியம் லதா விசுவநாதன், முதன்மை தலைமை மருத்துவ இயக்குனர் பிரசன்னகுமார், முதன்மை கண்ட்ரோலர் (ஸ்டோர்) கிருஷ்ணமூர்த்தி, தலைமை நிர்வாக அதிகாரி சுதாகர்ராவ், தலைமை திட்ட இயக்குனர் நாகேந்திரகுமார், தலைமை சிக்னல் மற்றும் டெலிகம்யூனிகேசன் பொறியாளர் இளவரசன், முதன்மை தலைமை பொறியாளர் (மெக்கானிக்கல்) ஏ.கே.சத்பால், முதன்மை நிதி ஆலோசகர் மஞ்சுளா ரங்கராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ரெயில் விபத்து போன்ற பேரிடர் காலங்களில் சிறப்பான முறையில் செயல்பட்டதற்காகவும், சிறந்த பாதுகாப்பு முறைகளை கையாளுவதற்காகவும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் திருச்சி கோட்டத்திற்கு ‘ஐ.எஸ்.ஓ. 9001:2015’ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பொதுமேலாளர் குல்செரஸ்தா ரெயில்வே அதிகாரிகளிடம் வழங்கினார். தொடர்ந்து தென்னக ரெயில்வேயின் பேரிடர் மேலாண்மை திட்டத்தையும் அவர் வெளியிட்டார். தொடர்ந்து காரைக்கால் ரெயில் நிலைய வளாகத்தில் பொது மேலாளர் ஆர்.கே.குல்செரஸ்தா மரக்கன்று நட்டார். முன்னதாக தென்னக ரெயில்வே பொதுமேலாளர் திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். 

Next Story