விழுப்புரம் ரவுடி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் பாதுகாப்பாக செயலிழக்க செய்யப்பட்டன


விழுப்புரம் ரவுடி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் பாதுகாப்பாக செயலிழக்க செய்யப்பட்டன
x
தினத்தந்தி 1 Feb 2018 7:44 AM IST (Updated: 1 Feb 2018 7:44 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் ரவுடி வீட்டில் கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் பாதுகாப்பாக செயலிழக்க செய்யப்பட்டன.

விழுப்புரம்,

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அசார் (வயது 28). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 2015-ம் ஆண்டில் நடந்த கடத்தல் வழக்கு தொடர்பாக அசாரை விழுப்புரம் தாலுகா போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவருடைய வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது வீட்டின் பின்புற பகுதியில் 20 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி திருப்பச்சாவடிமேட்டில் உள்ள ஒரு குடோனில் பத்திரமாக வைத்திருந்தனர்.

இந்த நிலையில் அந்த வெடிகுண்டுகளை செயலிழக்க செய்ய வைக்க தாலுகா போலீசார் முடிவு செய்தனர். இதற்காக சென்னையில் உள்ள வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் நிபுணர்களின் உதவியை நாடினர்.

இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் 3 பேர் நேற்று விழுப்புரம் திருப்பச்சாவடிமேட்டுக்கு வந்தனர். அங்கு பொதுமக்கள் யாரும் வராத அளவிற்கு தாலுகா போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் பாதுகாப்பு கவச உடை அணிந்து குடோனில் வைக்கப்பட்டிருந்த 20 நாட்டு வெடிகுண்டுகளையும் பாதுகாப்பாக அங்குள்ள வனப்பகுதிக்கு எடுத்துச்சென்றனர்.

இந்த நாட்டு வெடிகுண்டுகள் எந்தளவிற்கு அபாயகரமானது, வெடிக்க வைத்தால் அதன் அதிர்வுகள் எந்தளவிற்கு இருக்கும் என்பதை மெட்டல் டிடெக்டர் கருவி உள்ளிட்ட பிரத்யேக கருவியின் உதவியுடன் சோதனை செய்தனர். சோதனையில் 10 வெடிகுண்டுகள் செயலிழக்க வைப்பது எனவும், அபாயகரமான 10 வெடிகுண்டுகளை வெடிக்க வைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அதேபகுதியில் 3 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி அந்த பள்ளத்தில் முதலில் 10 வெடிகுண்டுகளை புதைத்து 100 மீட்டர் தொலைவிற்கு சென்று அங்கிருந்து அந்த வெடிகுண்டுகளை செயலிழக்க வைத்தனர். அதன் பிறகு மீதமுள்ள 10 வெடிகுண்டுகளையும் வெடிக்க செய்தனர். குண்டுகள் வெடித்தபோது அப்பகுதியில் பயங்கர சத்தம் ஏற்பட்டது. மேலும் கரும்புகையாக வெளியேறி அதிர்வலையை ஏற்படுத்தியது. குண்டுகள் வெடித்ததில் சிதறிய துகள்களை போலீசார் சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர். 

Next Story