இறக்குமதி மணல் விற்பனை பற்றி பொதுப்பணித்துறையே முடிவு எடுக்கும் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும்


இறக்குமதி மணல் விற்பனை பற்றி பொதுப்பணித்துறையே முடிவு எடுக்கும் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 1 Feb 2018 8:05 AM IST (Updated: 1 Feb 2018 8:05 AM IST)
t-max-icont-min-icon

இறக்குமதி செய்யப்படும் மணலை விற்பனை செய்வது தொடர்பாக ‘பொதுப்பணித்துறை தான் முடிவு செய்யும்‘ என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராமையா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த புதிய மனுவில் கூறியிருப்பதாவது:-

மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று ஐகோர்ட்டு தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் 13-ந்தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், டிசம்பர் 8-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் இறக்குமதி செய்யப்படும் மணலை சேமித்து வைப்பது, அதை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல போக்குவரத்து லைசென்சு வழங்குவது, விற்பனை செய்ய அனுமதிப்பது போன்ற நடவடிக்கைகளை பொதுப்பணித்துறை தான் முடிவெடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது. மேலும், மணல் குவாரிகளை மூட வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு விசாரணையின்போது இந்த அரசாணை தொடர்பான தகவலை கோர்ட்டில் அரசு தரப்பில் தெரிவிக்கவில்லை. எனவே இந்த அரசாணையை ரத்து செய்து, இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான அரசு வக்கீல், கோர்ட்டு உத்தரவின்பேரில் தான் அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றார்.

விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர், நீர் ஆதாரத்துறை தலைமை பொறியாளர், புவியியல்-கனிமவளத்துறை கமிஷனர், இயக்குனர், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். 

Next Story