தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது என்று கருத்து கூறியதால் மத்திய அரசுடன் விரிசல் என அர்த்தமில்லை - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது என்று கருத்து கூறியதால் மத்திய அரசுடன் விரிசல் என அர்த்தமில்லை - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 1 Feb 2018 2:35 AM GMT (Updated: 1 Feb 2018 2:35 AM GMT)

‘தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது’ என்று கருத்து கூறியதால், மத்திய அரசுடன் விரிசல் என அர்த்தமில்லை’ என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

கோவை,

தமிழக துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதியம் விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடகம் 81 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு விட வேண்டும். ஆனால் தற்போது டெல்டா விவசாயத்தை பாதுகாக்க 7 முதல் 10 டி.எம்.சி. தண்ணீர் அவசர தேவைக்காக கர்நாடகாவிடம் கேட்டுள்ளோம். ஒரு மாநிலத்தின் முதல்- அமைச்சர் என்ற முறையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடக முதல்-மந்திரியை சந்தித்து பேச உள்ளார். கேட்பது நமது உரிமை. கொடுப்பது காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி கர்நாடகத்தின் கடமை.

தமிழகத்திற்கு மத்திய பட்ஜெட்டில் முழுமையாக நிதி ஒதுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். திராவிட இயக்கம் உள்ள தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது என நான் கருத்து கூறியதால், மத்திய அரசுடன் விரிசல் என அர்த்தமில்லை. திராவிட கட்சிகள் தமிழக மக்களிடம் ஒன்றிணைந்து இருக்கும் காரணத்தினால் தேசிய கட்சிகள் அவர்களின் கட்சிகளை நிலைநிறுத்துவதற்கு தேவையான பணியை செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் இதுவரை அந்த முயற்சியை எடுக்கவில்லை. எனவே திராவிட கட்சிகளின் நிலைபாட்டை தான் தமிழக மக்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தேனி நியூட்ரினோ ஆய்வக திட்டம் தொடர்பாக மத்திய அரசு விளக்க வேணடும். கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன் சகோதர சண்டை இருக்க கூடாது. முதல்-அமைச்சரும், நானும் டெல்லி செல்லும் போது ஒவ்வொரு முறையும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்தி வந்துள்ளோம்.

போக்குவரத்து துறை சீரழிந்து போனதற்கு காரணமே தி.மு.க. தான். அவர்கள் வைத்து சென்ற கடன் மற்றும் போக்குவரத்து துறையின் சொத்துகளை அவர்கள் அடமானம் வைத்தது தான் காரணம். சேலம்- கோவை இடையே ஆயிரம் பஸ் வழித்தட விவகாரம் தொடர்பான புகார் ஆதாரமற்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story