தீண்டாமை சுவரை அகற்ற வலியுறுத்தி மலையடிவாரத்தில் குடும்பத்துடன் குடியேறி போராட்டம்


தீண்டாமை சுவரை அகற்ற வலியுறுத்தி மலையடிவாரத்தில் குடும்பத்துடன் குடியேறி போராட்டம்
x
தினத்தந்தி 1 Feb 2018 8:41 AM IST (Updated: 1 Feb 2018 8:41 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாவட்டம் பேரையூர் இந்திரா காலனியில் இரு சமூகத்தினர் குடியிருந்து வருகின்றனர்.

பேரையூர்,

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ளது சந்தையூர். இங்குள்ள இந்திரா காலனியில் இரு சமூகத்தினர் குடியிருந்து வருகின்றனர். அதில் ஒரு சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் சுற்று சுவர் உள்ளதாகவும், அந்த சுவர் போக்குவரத்துக்கு பாதிப்பாக உள்ளது என்று மற்றொரு சமூகத்தினர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்து, சுவரை இடிக்க நீதிமன்ற உத்தரவு பெற்றனர். அவர்கள் இந்த உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கும், பேரையூர் தாசில்தாருக்கும் கோரிக்கை வைத்தனர். ஆனால் சுவர் இடிப்பு கோரிக்கையை அமல்படுத்தாத நிலையில் கடந்த 2 நாட்களாக பட்டினி போராட்டம் நடத்தினர். அதன் பின்னும் சுவர் அகற்றப்படவில்லை என்று கூறி சந்தையூரை அடுத்து உள்ள தேன்மலையாண்டி கோவில் அருகே உள்ள மலையடிவாரத்தில் குடும்பம், குடும்பமாக குடியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் குடியிருக்கும் பகுதியிலே அவர்கள் உணவு சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கனகவள்ளி (வயது 35) என்பவர் கூறியதாவது:-

தீண்டாமை சுவரை அகற்றும் வரை நாங்கள் இந்த மலைப் பகுதியிலே குடியிருப்போம். புழு, பூச்சிக்கு கொடுக்கும் மரியாதை கூட எங்களுக்கு கொடுக்கப்படவில்லை. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை இங்கு இருந்து வரமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார். இந்தநிலையில் சந்தையூர் இந்திரா காலனி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
1 More update

Next Story