தமிழகத்தில் 24-ந் தேதிக்குள் ஆட்சி மாற்றம் ஏற்படும் - அமைச்சர் செந்தில்பாலாஜி


தமிழகத்தில் 24-ந் தேதிக்குள் ஆட்சி மாற்றம் ஏற்படும் - அமைச்சர் செந்தில்பாலாஜி
x
தினத்தந்தி 1 Feb 2018 9:50 AM IST (Updated: 1 Feb 2018 9:50 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் வருகிற 24-ந் தேதிக்குள் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

ஈரோடு,

பஸ் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. (அம்மா) அணியின் ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாணவர் அணி இணைச்செயலாளர் எம்.பிரபு தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் ஆர்.நடராஜன், துணைச்செயலாளர் முத்துக்குமரன், பொருளாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், டி.டி.வி. தினகரன் ஆதரவாளருமான வி.செந்தில்பாலாஜி கலந்துகொண்டு பேசினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி உள்ளனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட 7 நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்யக்கூடாது. அவர்களுக்கு முழுமையாக சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் எங்களுக்கு ஆதரவாக நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்து இருக்கிறோம். வருகிற 24-ந் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்திற்குள் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவியில் இருந்து நீக்கப்படுவார். இதேபோல் பல்வேறு நிகழ்வுகள் ஏற்படும்.

பஸ் கட்டண உயர்வு பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது மத்திய அரசு டீசல் விலையை உயர்த்தி கொண்டே சென்றது. அப்போது டீசல் விலை உயர்வால் ஏற்பட்ட நஷ்டத்தை தமிழக அரசு மானியமாக போக்குவரத்துக்கழகத்துக்கு வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டார். எனவே எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் நிர்வாக திறமையின்மையே பஸ் கட்டண உயர்வுக்கு காரணமாகும். இந்த உயர்வை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

பா.ஜ.க.வினர் தமிழக அரசு குறித்து பல்வேறு குறைகளை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அதற்கு ஆட்சியில் இருப்பவர்கள் எந்தவொரு கருத்தும் தெரிவிப்பதில்லை. மத்திய அரசை எதிர்த்து கருத்து தெரிவிக்க அவர்கள் பயப்படுகிறார்கள்.

இவ்வாறு செந்தில்பாலாஜி கூறினார்.

Next Story