நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் “கரிசல் திருவிழா” 7–ந் தேதி தொடங்குகிறது


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் “கரிசல் திருவிழா” 7–ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 2 Feb 2018 2:15 AM IST (Updated: 2 Feb 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கரிசல் திருவிழா வருகிற 7–ந் தேதி(புதன்கிழமை) தொடங்குகிறது.

பேட்டை,

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கரிசல் திருவிழா வருகிற 7–ந் தேதி(புதன்கிழமை) தொடங்குகிறது.

இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

கரிசல் திருவிழா

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொடர்பியல் துறை மாணவர்களின் அமைப்பான “மனோ மீடியா கிளப்“ சார்பாக மாணவர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கரிசல்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா வருகிற 7, 8, 9 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

விழாவில் சினிமா, பத்திரிகை, வானொலி, புகைப்படம் போன்ற பல்வேறு துறைகளில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

சினிமா இயக்குனர்

தொடக்க நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் தலைமை தாங்குகிறார். பதிவாளர் சந்தோஷ்பாவு முன்னிலை வகிக்கிறார். மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் பூ பட இயக்குனர் சசி கலந்து கொள்கிறார்.

மேலும் திரைப்பட பாடகர் முகேஷ், புகைப்பட கலைஞர் சுமந்த் குமார் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். நிகழ்வில் குறும்படம், ஆவணப்படம், சமூக விழிப்புணர்வு படம், ஓவியர், நாட்டுப்புற நடனம், அமைதி நாடகம், பாடல், வினாடி–வினா போன்ற 14 வகையான போட்டிகள் நடைபெற உள்ளது.

விழாவில் கலந்து கொள்ள விரும்பம் உள்ள இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள், தங்கள் கல்லூரியில் உரிய அனுமதி பெற்று நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.

பதிவு கட்டணம்

நிகழ்ச்சி பதிவு கட்டணமாக ரூ.650 செலுத்த வேண்டும் (உணவு மற்றும் தங்கும் வசதியுடன்), நெல்லை மற்றும் சுற்றியுள்ள மாணவர்களுக்கு ரூ.250 பதிவு கட்டணமாக பெறப்படுகிறது. விழாவில் மூன்றாம் நாளில் வெற்றி பெற்ற கல்லூரிகளுக்கு வெற்றி கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story