சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து; 2 பேர் கைது
சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அடையாறு,
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 22), மாநில கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், அதே கல்லூரியில் படிக்கும் நண்பர் பூபாலன் என்பவருக்கும் சில வாரங்களுக்கு முன்பு ரெயிலில் பயணம் செய்யும்போது வாய்த்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில் சதீஸ்குமார் பூபாலனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பூபாலன் தனது நெருங்கிய நண்பர் முரளியிடம் இதுபற்றி கூறினார். கோபம் அடைந்த முரளி அவரது நண்பர்களான அதே கல்லூரியில் படிக்கும் சுரேஷ் (22), சந்தோஷ் (22) உள்பட 8 பேர் கும்பலுடன் சதீஷ்குமாரை தாக்க காத்திருந்தார்.
கத்திக்குத்து
கடந்த 29-ந் தேதி வழக்கம்போல் சதீஸ்குமார் மின்சார ரெயிலில் வேளச்சேரியில் இருந்து கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்தார். சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையத்தில் அவர் இறங்கியவுடன் முரளி மற்றும் அவரது நண்பர்கள், என்னடா நீ என்ன அவ்வளவு பெரிய ஆளாடா? என்று கூறி கண்ணத்தில் அறைந்தனர்.
இதனை சற்றும் எதிர்பாராத சதீஸ்குமார் செய்வது அறியாமல் நின்றார். அப்போது முரளி, சந்தோஷ், சுரேஷ் ஆகியோர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சதீஸ்குமாரின் இடது கை மற்றும் தலையில் குத்தினார்கள். அவர் சத்தம்போட்டு அலறவே கத்தியுடன் அவர்கள் தப்பிச் சென்றனர்.
2 பேர் கைது
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சதீஸ்குமார் நேற்று திருவான்மியூர் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். போலீசார் சுரேஷ், சந்தோஷ் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2 கத்திகளை கைப்பற்றினர். முரளி உள்பட அவரது நண்பர்கள் 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story