‘மத்திய அரசு தாக்கல் செய்தது, தேர்தல் பட்ஜெட்’ சிவசேனா விமர்சனம்


‘மத்திய அரசு தாக்கல் செய்தது, தேர்தல் பட்ஜெட்’ சிவசேனா விமர்சனம்
x
தினத்தந்தி 1 Feb 2018 10:00 PM GMT (Updated: 1 Feb 2018 9:35 PM GMT)

“மத்திய அரசு தாக்கல் செய்தது, தேர்தல் பட்ஜெட்” என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

மும்பை,

“மத்திய அரசு தாக்கல் செய்தது, தேர்தல் பட்ஜெட்” என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

அரவிந்த் சாவந்த் எம்.பி.

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனை விமர்சித்து சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இது. அதனால் தான் மத்திய அரசின் கவனம் தொழிற்சாலைகளில் இருந்து விடுபட்டு விவசாயம், சுகாதாரம் மற்றும் கல்வியை நோக்கி நகர்ந்து இருக்கிறது.

சிவசேனா வலியுறுத்தல்

காலநிலை மாற்றத்தால் பயிர் நாசத்தை சந்திக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடும், பயிர்க்கடன் தள்ளுபடியும் செய்யப்பட வேண்டும் என்று சிவசேனா நீண்ட காலமாக தீவிரமாக வலியுறுத்தி வருகிறது. நான் கூட தனிப்பட்ட முறையில் தரமான கல்வி, சுகாதார சேவை ஆகியவற்றை வலியுறுத்தி இருக்கிறேன். இப்போது தான் மத்திய அரசு அதை உணர்ந்திருக்கிறது.

இவ்வாறு அரவிந்த் சாவந்த் எம்.பி. தெரிவித்தார்.

விரக்தியில்...

சிவசேனா செய்தித்தொடர்பாளர் மணிஷா காயந்தே கூறுகையில், “ஜி.எஸ்.டி. நடைமுறை, பணமதிப்பு நீக்கம் மற்றும் குஜராத் சட்டசபை தேர்தலில் பலம் குறைவு ஆகியவற்றால் ஏற்பட்ட விரக்தியில், பட்ஜெட்டில் இந்த அறிவிப்புகளை அரசு வெளியிட்டிருக்கிறது” என்றார்.

மேலும், கோடிக்கணக்கான மக்கள் வங்கிகளை சார்ந்துள்ள போதிலும், வங்கிகளின் சேவை கட்டணம் அதிகரிப்பதாக கூறிய அவர், சாமானியர்கள் பணத்தை முதலீடு செய்ய எங்கே செல்வார்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், பெண்களுக்கான ‘நாப்கின்’களுக்கு ஜி.எஸ்.டி. வரி வீதம் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், அதுபற்றிய அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்று அவர் தெரிவித்தார்.

Next Story