அரசுக்கு தகவல்களை தெரிவிக்க ஒவ்வொரு துறையிலும் சிலீப்பர் செல்கள் உள்ளனர்


அரசுக்கு தகவல்களை தெரிவிக்க ஒவ்வொரு துறையிலும் சிலீப்பர் செல்கள் உள்ளனர்
x

ஒவ்வொரு துறையிலும் அரசுக்கு தகவல் தெரிவிக்க சிலீப்பர் செல்கள் உள்ளனர் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுவை ,

புதுவை அரசு சார்பில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும் நிர்வாகிகள் ஒற்றுமையாக இருந்தால் தான் நிர்வாகம் நன்றாக இயங்கும். அரசு நிர்வாகத்திலும் அதே நடைமுறை தான் பொருந்தும். ஒற்றுமைமை இல்லையெனில் அடிமட்ட நிர்வாகம் பாதிக்கப்படும். பொதுமக்கள் தான் நமது எஜமானர்கள் என்பதை அரசியல்வாதிகள், அதிகாரிகள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

அவ்வப்போது நிர்வாகத்தில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப அதிகாரிகள் பணியாற்ற கற்றுக்கொள்ள வேண்டும். திட்ட அறிக்கை தயாரித்தல், பயன்பாட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை தயார் செய்து மத்திய அரசுக்கு உடனுக்குடன் அனுப்பினால் தான் அதிக திட்டங்களை பெற முடியும். ஆனால், இவற்றை அனுப்புவதில் தேக்க நிலை இருந்து வருகிறது. மத்திய அரசுக்கு கோப்புகள் செல்லும்போது திட்ட அறிக்கை, பயன்பாட்டுச் சான்றிதழ் இணைத்து அனுப்பினால் ஒரு தொலைபேசி அழைப்பில் கூட திட்ட அனுமதியை பெற முடியும்.

புதுச்சேரி அரசு அலுவலகங்களில் கோப்புகள் தேங்கும் நிலையை பார்க்க முடிகிறது. தாங்கள் பணியாற்றுவது போல காட்டுவதற்காக சில அதிகாரிகள் மேஜை நிறைய கோப்புகளை தேக்கி வைத்துக்கொள்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். 3 நாள்களுக்கு மேல் எந்த கோப்பும் காரணம் இன்றி தேங்கக்கூடாது. கோப்புகளை ஆய்வு செய்யும்போது பாரபட்சம் காட்டக் கூடாது.

புதுவை மாநிலத்தில் நிறைய துறைகளில் உரிய காலத்தில் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை. உரிய நேரத்தில் பதவி உயர்வு வழங்க துறைத்தலைவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஊழலை எந்த அரசும் ஏற்றுகாது. ஊழல் ஒரு தீராத புற்றுநோய். இது சிறிய மாநிலம். முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் யாரை சந்திக்கின்றனர் என்பதை மக்கள் எளிதில் தெரிந்துகொள்வார்கள். எனவே, அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

மத்திய அரசு அமல்படுத்தும் திட்டங்களில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்படுவதை புதுவை மாநில அதிகாரிகள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் அரசுக்கு தகவல்களை தெரிவிக்க சிலீப்பர் செல்கள் உள்ளனர். அவர்கள் தவறு செய்பவர்கள் பற்றி உடனே தெரிவித்து விடுவர்.

சுற்றுலாத்துறை, தொழில்துறை, சாலை போக்குவரத்து, பொதுப்பணித்துறை ஆகிய 4 துறைகளிலும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். சுற்றுலாத்துறையை வளர்ச்சி ஏற்படுத்த, மத்திய அரசின் திட்டங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை வசதிகளை உடனடியாக செய்ய வேண்டும். அதிகாரிகள் கூட்டு முயற்சியாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story