‘வேண்டாம் இனி ஒரு வேலை நிறுத்தம்’


‘வேண்டாம் இனி ஒரு வேலை நிறுத்தம்’
x
தினத்தந்தி 2 Feb 2018 7:38 AM GMT (Updated: 2 Feb 2018 7:38 AM GMT)

போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டபூர்வமற்ற முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், அவர்களுடைய சம்பளத்தில் இருந்து வேலைக்கு வராத 7 நாட்களுக்கான சம்பளத்தை சட்டபூர்வமாக பிடித்தம் செய்யப்பட்டதாக அரசு கூறி உள்ளது.

போக்குவரத்து கழகங்களில் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 43 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஓட்டுனர், நடத்துனர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் என 1 லட்சத்து 8 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 11 ஆயிரத்து 839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்த பட்சம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு உள்ளது. சராசரியாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.390 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது. அதில் ரூ.100 கோடி பிடித்தம் செய்யப்பட்டு உள்ளது. நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் அறிவித்ததற்கு மாறாக, வேலை செய்யவில்லை என்றால் சம்பளம் இல்லை (‘நோ ஒர்க்- நோ பே’) என்ற கோட்பாட்டுக்கு விரோதமாக பணிக்கு வராமையால் அடிப்படை சம்பளம் பிடித்தம் செய்து உள்ளனர். போக்குவரத்து கழக தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ.100 கோடியை பெற நீதிமன்றத்தை நாடுவோம்.

மேலும் கடந்த மாதம் 4-ந்தேதி முன்பு இருந்த நிலை பாதுகாக்கப்படும் என்று வாக்குறுதியை அளித்துவிட்டு அதற்கு நேர் எதிர்மறையாக நிர்வாகத்தினர், பணியாளர்களை இடமாற்றம் செய்வது, பணி செய்யும் பேருந்துகளில் இருந்து இறக்கிவிடுவது, பணி மறுப்பது, அ.தி.மு.க. நிர்வாகிகள் மூலம் பொய்யான புகார்களை பெற்று தற்காலிக பணி நீக்கம் செய்வது போன்ற செயல்களில் போக்குவரத்து கழக நிர்வாகம் செய்து வருகிறது.

போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஜனவரி முதல் டிசம்பர் வரை சிறப்பாக பணி செய்யும் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம். குறிப்பாக அதிகமாக வசூல் செய்தவர்கள், 1 லிட்டர் டீசலுக்கு அதிக தூரம் பேருந்தை இயக்கியவர்கள், பயணிகள் தவறவிட்ட பொருட்களை நேர்மையாக ஒப்படைத்த தொழிலாளிகள், சிறப்பாக பணி செய்த தொழில்நுட்ப பிரிவு தொழிலாளர்கள், விபத்து மற்றும் ஆபத்தான நேரங்களில் துணிச்சலுடன் செயல்படும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப் படும். ஆனால் இந்த ஆண்டு சிறப்பாக வேலை செய்த பணியாளர்கள், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள் என்ற காரணத்துக்காக பாராட்டு சான்றிதழ் இல்லை என்று சொல்கிற அவமானகரமான செயலில் நிர்வாகங்கள் ஈடுபட்டன.

போக்குவரத்து கழகங்களில் இருந்து கடந்த 31-ந்தேதி 500 தொழிலாளர்கள் பணி ஓய்வு, விருப்ப ஓய்வு பெற்று உள்ளனர் அவர்களில் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட பணியாளர்களுக்கு எந்தவித பணபயன்களும் வழங்காமல், பணியில் இருந்து மட்டும் விடுவிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு குறைந்தபட்ச மனிதாபிமான செயல் கூட செய்யாத நிர்வாகங்களை தான் பார்க்க முடிகிறது. அத்துடன் கடினமாக உழைக்கும் தொழிலாளர்களை கோபப்படுத்தி மீண்டும் ஒரு வேலை நிறுத்தத்தை திணிப்பதை நிர்வாகங்கள் தூண்டுகின்றன. ஆனால் போக்குவரத்து தொழிலாளர்களும், பொதுமக்கள் நலன் கருதி, இனி வேலைநிறுத்தம் செய்ய வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் இருக்கின்றனர். ஆனால் நிர்வாகத்தின் போக்கு வேலைநிறுத்தத்தை தூண்டுவதாகவே உள்ளது. இதை கண்டித்து வரும் 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு வாயில் கூட்டம் நடத்தவும் திட்டமிட்டு உள்ளோம்.

- கே.நடராஜன், பொருளாளர், தொழிலாளர் முன்னேற்ற சங்கம்

Next Story