வறட்சி காரணமாக முதுமலையில் காட்டுத்தீ பற்றி எரிந்ததால் 3 ஹெக்டேர் வனப்பகுதி எரிந்து நாசம்


வறட்சி காரணமாக முதுமலையில் காட்டுத்தீ பற்றி எரிந்ததால் 3 ஹெக்டேர் வனப்பகுதி எரிந்து நாசம்
x
தினத்தந்தி 3 Feb 2018 3:45 AM IST (Updated: 2 Feb 2018 11:44 PM IST)
t-max-icont-min-icon

வறட்சி காரணமாக முதுமலையில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. இதில் 3 ஹெக்டேர் வனப்பகுதி எரிந்து நாசம் அடைந்தது.

மசினகுடி,

நீலகிரி மாவட்டத்தில் தற்போது பனிபொழிவு அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டை விட அதிகமாக உள்ளதால் வனப்பகுதிகள் வேகமாக வறண்டு வருகின்றன. குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மரம், செடி, கொடிகள், புற்கள்் கருக தொடங்கி உள்ளன. நீர்நிலைகள் வறண்டு வருகின்றன.

முதுமலை வனப்பகுதியில் வறட்சி தொடங்கி உள்ளதால் காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. காட்டுத்தீயை கண்காணிக்க தெப்பக்காடு பகுதியில் கட்டுப்பாட்டு அறை ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ ஏற்பட கூடிய இடங்களில் தீத்தடுப்பு கோடுகளும் ஏற்படுத்தப்பட்டன. மேலும் தற்காலிக தீயணைப்பு பணியாளர்களும், வேட்டை தடுப்பு மற்றும் வனத்துறை ஊழியர்களும் காட்டுத்தீ ஏற்பட்டால் உடனடியாக அணைக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று மதியம் முதுமலை தெப்பக்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு-கக்கநல்லா தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தில் சென்ற சில மர்ம நபர்கள் சிகரெட் துண்டை வீசி சென்று உள்ளனர். இதனால் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தெப்பக்காடு வனச்சரகர் ராஜேந்திரன் தலைமையில் 60-க்கும் மேற்பட்டோர் விரைந்து சென்று காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் காட்டுத்தீ தொடர்ந்து எரிந்தது. சுமார் ஒரு மணி நேரம் போராடி எதிர் தீ கொடுத்து தீயை கட்டுப்படுத்தினர். இதில் சுமார் 3 ஹெக்டேர் பரப்பளவிலான வனப்பகுதி எரிந்து நாசமானது. காட்டுத்தீ ஏற்பட்டவுடன் விரைந்து நடவடிக்கை எடுத்ததால் காட்டு தீயால் ஏற்பட இருந்த பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. காட்டுத்தீ ஏற்பட்ட இடத்தை முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் சீனிவாச ரெட்டி ஆய்வு செய்தார். 

Next Story