மாவட்ட செய்திகள்

சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம் + "||" + Cinnamuttam Boat Fishermen strike

சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்
மேற்கு கடற்கரையுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 250 விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றன.

விசைப்படகில் மீன்பிடிக்கும் மீனவர்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு சென்று விட்டு இரவு 9 மணிக்குள் கரை திரும்ப வேண்டும். இதனை மாற்றி கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.


இதற்கிடையே மீன்வளம் பெருகுவதற்காக ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் அமல் படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்த தடைக்காலம் 60 நாட்களாக உயர்த்தப்பட்டது. சின்னமுட்டம் கடற்கரை கிழக்கு கடற்கரையுடன் இணைக்கப்பட்டிருந்ததால் கடந்த ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதி முதல் 60 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

இதுபோல், குமரி மேற்கு கடற்கரை பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கி 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்பட்டது.

தற்போது, சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை மீன்வளத்துறையினர் மேற்கு கடற்கரை பகுதியுடன் இணைக்க முடிவு செய்துள்ளனர். அத்துடன், சின்னமுட்டம் உள்பட குமரி மேற்கு கடற்கரை முழுவதும் ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல் படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதற்கு சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இதுதொடர்பாக மீனவர்கள் கூறும் போது, கன்னியாகுமரி கடல் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் தான் மீன்களின் இனப்பெருக்கம் நடைபெறும். அதன்பின்பு கடலுக்கு சென்றால் கூடுதல் மீன்கள் கிடைக்கும். ஆனால், இப்போது கன்னியாகுமரி கடல்பகுதியை மேற்கு கடற்கரையுடன் இணைத்து ஜூன் 1-ந் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமல் செய்தால் எங்களின் தொழில் பாதிக்கும். எனவே, அரசு மேற்கு கடற்கரையுடன் இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றனர்.

மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. விசைப்படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், சின்னமுட்டத்தில் மீன்பிடி தொழில் முடங்கியதோடு, மீன் சந்தைகள் வெறிச்சோடின.z