பெண் கொலை; உல்லாசத்துக்கு வர மறுத்ததால் கத்தியால் குத்திக்கொன்று எரித்தேன், கள்ளக்காதலன் வாக்குமூலம்


பெண் கொலை; உல்லாசத்துக்கு வர மறுத்ததால் கத்தியால் குத்திக்கொன்று எரித்தேன், கள்ளக்காதலன் வாக்குமூலம்
x
தினத்தந்தி 3 Feb 2018 3:45 AM IST (Updated: 3 Feb 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

உல்லாசத்துக்கு வர மறுத்ததால் கத்தியால் குத்திக்கொன்று எரித்தேன் என்று பவானி அருகே நடந்த பெண் கொலையில் கைதான கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

பவானி,

பவானி அருகே உள்ள சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் இறந்துவிட்டார். அவருடைய மனைவி தனலட்சுமி (வயது 45). இவர் தனது தாய் மற்றும் தந்தை இருளப்பன் (70) ஆகியோருடன் வசித்து வந்தார். தனலட்சுமி அதே பகுதியில் உள்ள ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். அந்த தோட்டத்திலேயே ஒரு வீடும் உள்ளது.

பொங்கல் பண்டிகைகக்கு பின்னர் தனலட்சுமி அந்த தோட்டத்து வீட்டுக்கு சென்று தங்கி இருந்தார். இந்த நிலையில் அவருடைய தந்தை இருளப்பன் தனது மகள் தனலட்சுமியை பார்ப்பதற்காக தோட்டத்து வீட்டுக்கு கடந்த மாதம் 30-ந் தேதி காலை சென்றார். அப்போது வீட்டின் அருகே உள்ள குப்பைமேட்டில் தனலட்சுமி கரிக்கட்டையான நிலையில் பிணமாக கிடந்தார். அவர் எரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை வலைவீசி தேடி வந்தனர். மேலும் கொலையாளியை பிடிக்க பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜானகிராமன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படையினர் தனலட்சுமியின் செல்போனுக்கு வந்த அழைப்புகள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் அவர் கடைசியாக பேசிய எண்ணை வைத்து விசாரித்தார்கள். விசாரணையில் அந்த நபர் தளவாய்பேட்டையை சேர்ந்த தமிழ்செல்வன் (40) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தார்கள்.

இந்த நிலையில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்த தமிழ்செல்வன் நேற்று காலை வெளியூர் செல்வதற்காக ஜம்பை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர் தனலட்சுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசாரிடம் அவர் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் விவரம் வருமாறு:-

நான் தளவாய்பேட்டையில் வசித்து வருகிறேன். எனக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் எனக்கும், எனது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவள் என்னிடம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து வாங்கி குழந்தைகளுடன் தனியாக சென்றுவிட்டாள். அன்று முதல் தனியாக வசித்து வந்தேன்.

நான் பழைய இரும்புகளை வாங்கி அதை வீடு வீடாக சென்று விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தேன். அப்போது தனலட்சுமியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. மனைவியை பிரிந்து வாழ்ந்த எனக்கும் கணவரை இழந்த அவளுக்கும் இது ஆறுதலாக அமைந்தது. இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம்.

அப்போது தனலட்சுமி பணம் கேட்பாள். நானும் பணம் கொடுத்து வந்தேன். ஒரு கட்டத்தில் என்னிடம் பணம் அதிகமாக கேட்டாள். அதற்கு நான் மறுத்து வந்தேன். இதனால் அவள் என்னை தொந்தரவு செய்து வந்தாள். மேலும் அவள் என்னிடம் உல்லாசமாக இருக்கவும் மறுத்து வந்தாள். அதுமட்டுமின்றி வேறு நபருடன் கள்ளத்தொடர்பு அவள் வைத்திருந்ததும் எனக்கு தெரியவந்தது. இது எனக்குள் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவளை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்கான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தேன்.

சம்பவத்தன்று அவளுடைய வீட்டுக்கு நான் வழக்கம்போல் சென்றேன். அப்போது அவள் என்னிடம், ‘நீ எனக்கு பணம் குறைவாக தான் தருகிறாய். எனக்கு பணம் அதிகம் வேண்டும் என்று கூறினாள். மேலும் அவளை நான் உல்லாசத்துக்கு வரும்படி அழைத்தேன். ஆனால் அவள் வரவில்லை. இதனால் எனக்கும் அவளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. எங்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பேசிக்கொண்டிருக்கும்போது தனலட்சுமி கோபித்தபடி வீட்டை விட்டு வெளியே சென்றார்.

உடனே நான் வெளியே ஓடிச்சென்று நான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனலட்சுமியை பிடித்து அவளின் மார்பு, வயிறு பகுதியில் என மாறி மாறி குத்தினேன். இதில் ரத்த வெள்ளத்தில் அவள் அலறி துடித்தபடி கீழே சாய்ந்தாள். சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தாள். வீட்டு வாசலில் ரத்தக்கறை படிந்திருந்தது. அதை மறைக்க மண்ணை போட்டு மூடினேன்.

பின்னர் அவளை எரிக்க முடிவு செய்தேன். இதற்காக அவளை தரதரவென்று வீடு அருகே உள்ள குப்பைமேட்டுக்கு இழுத்து சென்றேன். அங்கு கிடந்த மரப்பலகை, வைக்கோல், தென்னங்கீற்றுகளை அடுக்கி வைத்து அவற்றின் மீது பிணத்தை வைத்தேன். இதைத்தொடர்ந்து தீ வைத்து எரித்தேன். மறுநாள் அதிகாலை 4 மணி வரை அங்கேயே உட்கார்ந்திருந்தேன். ஓரளவு தனலட்சுமி உடல் எரிந்து முடிந்ததும் அங்கிருந்து தப்பி தலைமறைவாக இருந்தேன்.

இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறினார். இதைத்தொடர்ந்து தமிழ்செல்வனை போலீசார் கைது செய்தனர். 

Next Story