டாக்டர் இல்லாமல் சிகிச்சை அளித்த 2 நர்சுகள் கைது


டாக்டர் இல்லாமல் சிகிச்சை அளித்த 2 நர்சுகள் கைது
x
தினத்தந்தி 3 Feb 2018 5:00 AM IST (Updated: 3 Feb 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டர் இல்லாமல் சிகிச்சை அளித்த 2 நர்சுகளை போலீசார் கைது செய்தனர்.

பனப்பாக்கம்,

தமிழகத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் டாக்டர் இல்லாமல் நர்சுகள் மற்றும் பணியாளர்கள் ஊசிபோட்டு சிகிச்சை அளித்து வருவதாக உயர் அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இவர்கள் சிகிச்சை அளிப்பதால் நோயாளிகளுக்கு நோய் அப்போது குணமானாலும் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படுகிறது

இந்த நிலையில் காவேரிப்பாக்கத்தில் உள்ள டாக்டர் தயாசங்கர் நடத்தி வரும் தனியார் மருத்துவமனையில் நர்சுகளே சிகிச்சை அளிப்பதாக கலெக்டர் ராமனுக்கு புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து வேலூர் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின் தலைமையில், மருந்துகள் ஆய்வாளர் தெய்வானை (குடியாத்தம்), போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுவேதா ஆகியோர் நேற்று பகலில் மாறுவேடத்தில் அந்த கிளினிக்கிற்கு சென்றனர். அங்கு 2 பெண்கள் மட்டும் இருந்தனர்.

அவர்களிடம் மருந்துகள் ஆய்வாளர் தெய்வானை தனக்கு கால் வலி இருப்பதாகவும், அதற்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்றும் கூறினார். உடனே அங்கிருந்த இளம்பெண்கள், தெய்வானைக்கு சிகிச்சையளிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது டாக்டர் இல்லாமல் நீங்கள் எப்படி சிகிச்சையளிப்பீர்கள்? என்று அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

அதற்கு டாக்டரிடம் போனில் கேட்டு சிகிச்சையளிக்கிறோம் என்று கூறி உள்ளனர். இந்த சம்பவத்தை மருந்தக ஆய்வாளர் தெய்வானை தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். இதைப் பார்த்ததும் வந்திருப்பவர்கள் அதிகாரிகள் என்பதை அவர்கள் தெரிந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து 2 பெண்களையும் அவர்கள் தப்பவிடாமல் பிடித்தனர். இருவரிடமும் விசாரணையை தொடங்கினர். அதில் ஒரு பெண் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த அனிதா என்பதும், பி.எஸ்சி நர்சிங் படித்திருப்பதும் மற்றொரு பெண் சிறுகரும்பூர் கிராமத்தை சேர்ந்த வரலட்சுமி என்பதும் டிப்ளமோ நர்சிங் படித்திருப்பதும் தெரிய வந்தது.

டாக்டர் இல்லாமல் சிகிச்சை அளித்ததாக அவர்கள் மீது நலப்பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அனிதா மற்றும் வரலட்சுமியை போலீசார் கைது செய்தனர்.
1 More update

Next Story