போலீஸ்காரர்களை தாக்கி துப்பாக்கியை பறித்த வழக்கு: மத்தியபிரதேசத்தை சேர்ந்த 3 பேரை சுட்டுப்பிடித்த போலீசார்


போலீஸ்காரர்களை தாக்கி துப்பாக்கியை பறித்த வழக்கு: மத்தியபிரதேசத்தை சேர்ந்த 3 பேரை சுட்டுப்பிடித்த போலீசார்
x
தினத்தந்தி 2 Feb 2018 9:45 PM GMT (Updated: 2 Feb 2018 9:02 PM GMT)

பெங்களூருவில், போலீஸ்காரர்களை தாக்கி துப்பாக்கியை பறித்த வழக்கில் தலை மறைவாக இருந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த 3 பேரை நேற்று போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

பெங்களூரு,

பெங்களூருவில், போலீஸ்காரர்களை தாக்கி துப்பாக்கியை பறித்த வழக்கில் தலை மறைவாக இருந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த 3 பேரை நேற்று போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதுமட்டுமல்லாமல் மேலும் 2 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள்.

பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார் நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

துப்பாக்கி பறிப்பு

பெங்களூரு கொடிகேஹள்ளி போலீஸ் நிலையத்தில் பரமேசப்பா, சித்தப்பா ஆகியோர் போலீஸ்காரர்களாக பணியாற்றி வருகிறார்கள். கடந்த மாதம்(ஜனவரி) 18-ந் தேதி இரவு இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் டாடா நகரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த 4 பேரை பிடித்து அவர்கள் விசாரிக்க முயன்றனர்.

அப்போது, ஆத்திரமடைந்த மர்மநபர்கள் அவர்கள் 2 பேரையும் ஆயுதங்களால் தாக்கிவிட்டு அவர்களிடம் இருந்த துப்பாக்கியை பறித்துச் சென்றுவிட்டனர். மர்மநபர்கள் தாக்கியதில் காயமடைந்த போலீசார் பரமேசப்பா, சித்தப்பா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மேலும், அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பணிக்கு இடையூறு செய்தது, கொலை முயற்சி, கொள்ளை உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் மர்மநபர்கள் மீது கொடிகேஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மத்தியபிரதேசத்தில் கைது

மேலும், துப்பாக்கியை பறித்து சென்ற மர்மநபர்களை கைது செய்ய வடகிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கிரீஷ் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடிவந்தனர். முதல்கட்ட விசாரணையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டம் பகோலி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ராய்சிங் (வயது 35) என்பவர் அங்கு பதுங்கி இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் மத்திய பிரதேச மாநிலம் பகோலிக்கு சென்று ராய்சிங்கை கைது செய்தனர். கடந்த 1-ந் தேதி ராய்சிங்கை போலீசார் பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர். கொடிகேஹள்ளி போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது, போலீசாரிடம் பறித்த துப்பாக்கியை பெங்களூருவில் உள்ள தனது கூட்டாளிகளிடம் கொடுத்து வைத்திருப்பதாக ராய்சிங் தெரிவித்தார்.

சுட்டு பிடித்தனர்

அதைத்தொடர்ந்து அவருடைய கூட்டாளிகள் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதன்மூலம், அவருடைய கூட்டாளிகள் 4 பேர் எலகங்கா நியூ டவுனில் உள்ள கெம்பனஹள்ளி கிராமத்தில் அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அதன்படி, இன்று(அதாவது நேற்று) அதிகாலை சுமார் 3.45 மணிக்கு வித்யாரண்யபுரா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் அங்கு சென்று 4 பேரையும் சுற்றி வளைத்தனர்.

போலீசாரை பார்த்தவுடன் அவர்கள் 4 பேரும் போலீசாரை தாக்கினார்கள். இதனால், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் அன்னய்யா ஆகியோர் 4 பேரையும் நோக்கி துப்பாக்கியால் மொத்தம் 4 ரவுண்டு சுட்டனர். இதில் 3 பேரின் கால்களில் குண்டுகள் பாய்ந்தன. அவர்கள் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தனர். இன்னொருவர் தப்பித்து ஓடினார். அவரை விரட்டி சென்று போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இவ்வாறாக 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

சிகிச்சை

போலீசாரின் துப்பாக்கி சூட்டில் அஜம்பாய் சிங்(25), ஜித்தேன்(19), சுரேஷ் கோத்ரியா(19) ஆகிய 3 பேரின் கால்களில் குண்டுகள் பாய்ந்தன. இவர்கள் 3 பேரும் விக்டோரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் 3 பேர் உள்பட மத்திய பிரதேசத்தில் கைதான ராய்சிங், இன்னொருவரான அபுபாய் சிங் ஆகியோரை சேர்த்து மொத்தம் 5 பேர் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

அத்துடன், இவர்கள் போலீசார் மீது நடத்திய தாக்குதலில் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்னய்யா, போலீஸ்காரர் சிதம்பரா ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

100 வழக்குகளில் தொடர்பு

கைதான 5 பேரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. இதுவரை பெங்களூரு, மைசூரு, துமகூரு, மங்களூரு, உடுப்பி ஆகிய பகுதிகளிலும், ஆந்திரா, கேரளா மாநிலங்களிலும் வீடுகளில் புகுந்து திருட்டு, கொள்ளையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பாலும் ரெயில் தண்டவாளங்களை ஒட்டி இருக்கும் வீடுகளை குறிவைத்து அவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். கைதானவர்கள் கொள்ளை, திருட்டு என்று மொத்தம் 100-க்கும் அதிகமான வழக்குகளில் தொடர்பு கொண்டவர்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. கைதானவர்களிடம் இருந்து போலீசாரிடம் பறிக்கப்பட்ட துப்பாக்கி, தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், கேமரா, கைக்கெடிகாரம், வில், அம்புகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வாறு சுனில் குமார் கூறினார்.

விசாரணை


முன்னதாக, கைதான 5 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த பொருட்களை போலீஸ் கமிஷனர் சுனில் குமார், கூடுதல் போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங், வடகிழக்கு துணை போலீஸ் கமிஷனர் கிரீஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.

மேலும், இந்த வழக்கில் தொடர்பு கொண்டவர்களிடம் பெங்களூருவை சேர்ந்த ஹமீத், அப்ரோஜ் ஆகியோர் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் நேற்று பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story