கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி யார்? பரமேஸ்வர் பேட்டி


கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி யார்? பரமேஸ்வர் பேட்டி
x
தினத்தந்தி 3 Feb 2018 3:00 AM IST (Updated: 3 Feb 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி யார்? என்பது குறித்த கேள்விக்கு பரமேஸ்வர் பதில் கூறி இருக்கிறார்.

பெங்களூரு,

தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி யார்? என்பது குறித்த கேள்விக்கு பரமேஸ்வர் பதில் கூறி இருக்கிறார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கட்சி மேலிடம் தீர்மானிக்கும்

கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பது தான் எங்களின் இலக்கு. முதல்-மந்திரி யார்? என்பது குறித்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். காங்கிரஸ் வெற்றி பெற்றால் அடுத்த முதல்-மந்திரியை கட்சி மேலிடம் தீர்மானிக்கும். தான் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் இருப்பதாக யார் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் கட்சி மேலிடத்தின் முடிவே இறுதியானது.

கட்சிக்கு ஒரு தலைவர் இருக்க வேண்டும். அதன்படி எங்களின் தலைவர், கட்சி மேலிடம் தான். எல்லா முடிவுகளையும் கட்சி மேலிடமே எடுக்கும். பெங்களூரு முழு அடைப்பு போராட்டத்திற்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. நாங்கள் சிறுபிள்ளைத்தனமாக அரசியல் நடத்த மாட்டோம். ராகுல் காந்தி கர்நாடகம் வரும்போது முழு அடைப்பு நடத்துவதாக பா.ஜனதாவினர் கூறி இருக்கிறார்கள். இது அவர்களுடைய விருப்பம் ஆகும்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை...

நாங்கள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வோம். மகதாயி பிரச்சினையில் பிரதமர் தலையிட வேண்டும். நடுவர் மன்றத்திற்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. ஆனால் பிரதமர் மோடி இந்த பிரச்சினையை தீர்க்க ஆர்வம் காட்டவில்லை. கர்நாடகத்தில் எங்கள் கட்சி மீண்டும் வெற்றி பெறும்.

கர்நாடக அரசு கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. இதன் பயனை மக்கள் அனுபவித்து உள்ளனர். அதனால் காங்கிரசை ஆதரிக்க மக்கள் தயாராக உள்ளனர். காங்கிரஸ் அரசுக்கு மக்களிடையே எதிர்ப்பு அலை எதுவும் இல்லை. சாதகமான அலை தான் வீசுகிறது.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

Next Story