கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைந்தால் சித்தராமையா, பிரதமர் மோடியிடம் செல்வார் குமாரசாமி பேட்டி


கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைந்தால் சித்தராமையா, பிரதமர் மோடியிடம் செல்வார் குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 3 Feb 2018 3:00 AM IST (Updated: 3 Feb 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைந்தால் சித்தராமையா, பிரதமர் மோடியிடம் செல்வார் என்று குமாரசாமி கூறினார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைந்தால் சித்தராமையா, பிரதமர் மோடியிடம் செல்வார் என்று குமாரசாமி கூறினார்.

ஜனதா தளம்(எஸ்) கட்சி மாநில தலைவர் குமாரசாமி விஜயாப்புராவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நகைச்சுவையாக சொல்லவில்லை

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெறும் 50 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றால், சித்தராமையா பா.ஜனதாவுடன் கைகோர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதை நான் நகைச் சுவையாக சொல்லவில்லை. சித்தராமையாவுக்கு அதிகார மோகம் அதிகரித்துவிட்டது. அதனால் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க சித்தராமையா என்ன வேண்டுமானாலும் செய்வார். கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் சித்தராமையா முதலில் பிரதமர் மோடியிடம் சென்று நின்று கொள்வார். 50 எம்.எல்.ஏ.க்களை வைத்துக் கொண்டு பா.ஜனதாவுடன் சேர்ந்து அவர் ஆட்சி அமைத்தாலும் அமைப்பார். காங்கிரசில் சித்தராமையா சொல்பவருக்கே டிக்கெட் வழங்கப்படுகிறது.

நல்லாட்சியை வழங்க முடியும்

இந்த முறை நடைபெறும் தேர்தலில் எங்கள் கட்சிக்கு மக்கள் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். அவ்வாறு ஆட்சி அதிகாரத்தை வழங்கினால் எங்களால் நல்லாட்சியை வழங்க முடியும். விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்வேன். விவசாயிகளின் வருமானத்தை பெருக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவேன். விவசாயிகளை பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய செய்வேன்.

கர்நாடகத்தில் காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய 2 தேசிய கட்சிகளும் ஆட்சி செய்தன. ஆனால் இந்த கட்சிகள் கர்நாடகத்தின் நலனை காக்கவில்லை. அதனால் மாநில கட்சிக்கு மக்கள் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். நான் முதல்-மந்திரியானால் கர்நாடகத்தின் தலையெழுத்தை மாற்றி காட்டுவேன்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story