பால்கர் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி தேநீர் விற்பனையாளர்கள் 2 பேர் பலி


பால்கர் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி தேநீர் விற்பனையாளர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 2 Feb 2018 10:30 PM GMT (Updated: 2 Feb 2018 10:26 PM GMT)

பால்கர் ரெயில் நிலையத்தில் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி தேநீர் விற்பனையாளர்கள் 2 பேர் உடல் சிதறி பலியாகினர்.

வசாய்,

பால்கர் ரெயில் நிலையத்தில் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி தேநீர் விற்பனையாளர்கள் 2 பேர் உடல் சிதறி பலியாகினர். இதில், ரெயிலில் சிக்கிய மற்றொருவரின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

தேநீர் விற்பனையாளர்கள்

பால்கர் ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் அர்பாஜ் பட்டான்(வயது19). இவர் பால்கர் ரெயில் நிலையத்தில் தேநீர் விற்று வந்தார். இதுபோல அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் குப்தா(30) மற்றும் ஒருவரும் ரெயில் நிலையத்தில் தேநீர் விற்று வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 6.40 மணி அளவில் சவுராஷ்ட்டிரா எக்ஸ்பிரஸ் வருகைக்காக இவர்கள் 3 பேரும் பால்கர் ரெயில் நிலையம் பிளாட்பாரம் நம்பர் 1-ல் இருந்த தண்டவாளத்தில் அமர்ந்து செல்போனில் பாட்டு கேட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த ரெயில் பிளாட்பாரம் நம்பர் 1-ல் வருவதற்கு பதிலாக 3-ல் வருவதாக அறிவிப்பு வெளியானது.

ரெயில் மோதி விபத்து

இந்த அறிவிப்பை கவனிக்காத அவர்கள், அங்கேயே அமர்ந்து இருந்ததாக தெரிகிறது. அப்போது பிளாட்பாரம் நம்பர் 1-ல் வேகமாக வந்த சூரத்-பாந்திரா இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த 3 பேர் மீதும் பயங்கரமாக மோதிச்சென்றது.

இந்த பயங்கர விபத்தில் அர்பாஜ் பட்டான், ராஜேஷ் குப்தா ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவல் அறிந்த பால்கர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒருவர் மாயம்

இந்த விபத்தின் போது உடன் இருந்த மற்றொரு தேநீர் விற்பனையாளர் குறித்து எந்தவித தகவலும் தெரியவில்லை. அவர் மாயமாகி உள்ளதால் ரெயிலுடன் அவரது உடல் சிக்கி அடித்துச்செல்லப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பால்கர் ரெயில் நிலைய பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்து குறித்து பால்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மற்றொரு தேநீர் விற்பனையாளரின் கதி என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story