உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை 2 மாதத்தில் தொடங்கும்


உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை 2 மாதத்தில் தொடங்கும்
x
தினத்தந்தி 2 Feb 2018 10:38 PM GMT (Updated: 2 Feb 2018 10:38 PM GMT)

சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் 2 மாதத்தில் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை தொடங்கும் என்று சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சேலம்,

தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சுகாதாரப்பணிகள் குறித்தும், ரூ.23 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அப்போது அவர், டெங்கு தடுப்பு பணியை சிறப்பாக மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் ரோகிணிக்கும், மாவட்ட சுகாதாரத்துறை, மாநகராட்சி, உள்ளாட்சித்துறை, ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெங்கு தடுப்பு பணிகளை சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார் என்றார்.

அதன் பின்னர் சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிக்கு சென்று, அங்கு ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன ஸ்கேன் மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் ஆஸ்பத்திரி டீன் டாக்டர் கனகராஜ் மற்றும் டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தி விட்டு, சிகிச்சைக்காக வந்த நோயாளிகளிடம் சிகிச்சை முறை குறித்தும், குறைகளையும் டாக்டர் ராதாகிருஷ்ணன் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் உடல் உறுப்புகள் தானம் பெற்று மற்றவர்களுக்கு பொருத்துவதில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. ஆண்டுக்கு சுமார் 185 பேர்களிடம் உடல் உறுப்புகள் பெற்று மற்றவர்களுக்கு பொருத்தப்படுகிறது. கடந்த 2008-ம் ஆண்டு முதல் 1,082 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் தானம் பெற்று அவற்றை 6 ஆயிரம் பேருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு நமக்கு தொடர்ந்து 3 முறை விருது வழங்கி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, கண்மாற்று அறுவை சிகிச்சை, இதய மாற்று அறுவை சிகிச்சையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் தொடங்குவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இன்னும் 45 நாட்கள் முதல் 60 நாட்களுக்குள் (2 மாதம்) சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட இதர உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை பணிகள் தொடங்கப்படும். அதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகிறது.

சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் வாலிபர் தீக்குளித்து இறந்த சம்பவம் வேதனையானது. அந்த வேளையில் தீயணைக்கும் கருவி காலாவதியாகி விட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் எவ்வித சமாதானத்திற்கும் இடம் கிடையாது. எல்லாமே சரியாக இருந்திருக்க வேண்டும். அதில் தவறுகள் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசிய சுகாதாரத்துறை திட்டத்தின்கீழ் 2017-18-ம் ஆண்டுக்கு சேலம் மாவட்டத்தில் சுகாதார தொடர்பான உபகரணங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிக்காக ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேட்டூர், ஆத்தூரில் கூடுதல் கட்டிடங்கள் ரூ.11 கோடி அளவில் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல ஆத்தூர், எடப்பாடி பகுதியில் விபத்து ஏற்பட்டால் சிகிச்சைக்காக சேலம் வரும் நிலை உள்ளது. அந்தந்த பகுதி ஆஸ்பத்திரிகள் மேம்படுத்தப்படும். மேலும் சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) செய்வதற்கான வசதியும் மேம்படுத்தப்பட உள்ளது.

‘நீட்‘ தேர்வு குறித்து கருத்துகூற விரும்பவில்லை. ஏனென்றால், அது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. தமிழகத்தில் 300 டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதுவும் விரைவில் நிரப்பப்படும். அடுத்து நர்சுகள் பற்றாக்குறையும் உள்ளது. நர்சுப்பணி மிக முக்கியமானது. படுக்கை எண்ணிக்கைக்கு ஏற்ப பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நர்சு காலிப்பணியிடமும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சேலம் போன்ற மாவட்டங்களில்தான் பெண் சிசுக்கொலை தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, அனுமதின்றி ஸ்கேன் சென்டர் செயல்பட்டால், அனைத்து இணை இயக்குனர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள். அதேவேளையில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என கண்டறிந்து சொல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது கலெக்டர் ரோகிணி, மாநகராட்சி ஆணையாளர் ஆர்.சதீஷ், சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் வளர்மதி, துணை இயக்குனர் டாக்டர் பூங்கொடி, மாநகர் நல அலுவலர் டாக்டர் பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story