மாவட்ட செய்திகள்

சாலை பணிக்காக மண் எடுக்க எதிர்ப்பு; 10 வாகனங்கள் சிறைபிடிப்பு + "||" + Opposite to take soil for road work; 10 vehicles imprisonment

சாலை பணிக்காக மண் எடுக்க எதிர்ப்பு; 10 வாகனங்கள் சிறைபிடிப்பு

சாலை பணிக்காக மண் எடுக்க எதிர்ப்பு; 10 வாகனங்கள் சிறைபிடிப்பு
ஆரல்வாய்மொழி அருகே சாலை பணிக் காக மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, 10 வாகனங்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
ஆரல்வாய்மொழி,

காவல்கிணறு– பார்வதிபுரம் தங்க நாற்கர சாலை பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக ஆரல்வாய்மொழி அருகே தேவசகாயம் மவுண்ட் தெற்குகாடு பகுதியில் இருந்து மண் எடுக்கப்பட்டு வந்தது. இதற்காக தினமும் ஏராளமான லாரிகளில் மண் எடுத்து மங்கம்மாள் சாலை வழியாக வேலை நடைபெறும் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.


இந்தநிலையில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதாகவும், இதனால், அந்த பகுதியில் பெரிய பள்ளங்கள் தோன்றி ஆபத்து ஏற்படுவதாகவும், மண் கொண்டு செல்லும்போது தூசு பறப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் அந்த பகுதி மக்கள் புகார் கூறினர்.

இந்தநிலையில், நேற்று தேவசகாயம் மவுண்ட் பங்குத்தந்தை ஸ்டீபன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் மங்கம்மாள்சாலை பகுதியில் கூடினர். அவர்கள், தெற்குகாடு பகுதியில் இருந்து மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

அத்துடன் அந்த வழியாக மண் ஏற்றி சென்ற 10 வாகனங்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, தோவாளை தாசில்தார் சுரேஷ்குமார், துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் கணேச பெருமாள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, தேவசகாயம் மவுண்ட் தெற்குகாடு பகுதியில் இருந்து இனிமேல் மண் எடுக்க அனுமதிக்கமாட்டோம் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.