கல்வி உதவித்தொகையை குறைத்த அரசாணையை ரத்து செய்யக்கோரி மாணவ, மாணவிகள் உண்ணாவிரதம்


கல்வி உதவித்தொகையை குறைத்த அரசாணையை ரத்து செய்யக்கோரி மாணவ, மாணவிகள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 4 Feb 2018 4:30 AM IST (Updated: 4 Feb 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

கல்வி உதவித்தொகையை குறைத்த அரசாணையை ரத்து செய்யக்கோரி மாணவ, மாணவிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

திருச்சி,

அம்பேத்கர் கல்வி மாணவர் இயக்கம், அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கம் ஆகியவை சார்பில் நேற்று காலை திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்க மாநில அமைப்பாளர் பரதன் தலைமை தாங்கினார். செல்ல.செல்வகுமார் கோரிக்கைகள் குறித்து பேசினார்.

பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை குறைத்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அரசு கட்டணக்குழு நிர்ணயித்த நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கல்வி கட்டணத்தை, கல்வி உதவித்தொகையாக வழங்க வேண்டும்.

சாதிய பாகுபாட்டுடன் செயல்படும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் பயிலும் பட்டியல் இன மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். அந்தந்த கல்வி ஆண்டு முடிவதற்குள் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடந்த இந்த போராட்டத்தில் ஏராள மான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில், 2012-ம் ஆண்டு முதல் பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.85 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் ரூ.35 ஆயிரம் குறைப்பட்டு, ரூ.50 ஆயிரம் மட்டுமே கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதனால் பொறியியல் படித்து வரும் 1½ லட்சம் மாணவ-மாணவிகள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும், என்று கூறினர். 

Next Story