பாராளுமன்ற தேர்தலோடு சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது டி.டி.வி.தினகரன் பேட்டி


பாராளுமன்ற தேர்தலோடு சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 4 Feb 2018 4:30 AM IST (Updated: 4 Feb 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

டிசம்பர் மாதத்திற்குள் பாராளுமன்ற தேர்தலோடு சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது என்று தஞ்சையில், டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

தஞ்சாவூர்,

அண்ணாவின் நினைவு நாளையொட்டி தஞ்சையில் உள்ள அண்ணா சிலைக்கு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.யை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் வருகிறதே?.

பதில்:- அது வெறும் வதந்தி தான். அப்படி எந்த தகவலும் இல்லை.

கேள்வி:- டிசம்பர் மாதமே பாராளுமன்ற தேர்தல் வருவதாக சொல்லப்படுகிறதே?

பதில்:- டிசம்பர் மாதத்திற்குள் பாராளுமன்ற தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது.

கேள்வி:- டெல்டா மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. கர்நாடகத்திடம் இருந்து தண்ணீர் பெற முதல்-அமைச்சர் கடிதம் எழுதி இருப்பது பற்றி?

பதில்:- முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று தமிழகத்திற்குரிய தண்ணீரை பெற்று தந்தார். காவிரி நடுவர் மன்றம் அமைக்க போராடினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று இப்போதும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் மழையின்றி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கோர்ட்டிற்கு சென்று தமிழகத்திற்குரிய தண்ணீரை பெறாமல், கடிதம் எழுதி விட்டு கர்நாடக முதல்-மந்திரியின் அனுமதிக்காக காத்திருப்பது இவர்களது கையாலாகாதனத்தையே காட்டுகிறது. இது மக்கள் விரோத அரசு. மக்களுக்காக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மக்கள் ஆட்சி அமைக்க தான் எங்களுக்கு மக்கள் ஆதரவு தருகின்றனர்.

கேள்வி:- தனிக்கட்சி தொடங்க ஆலோசனை நடப்பதாக சொல்லப்படுகிறதே?

பதில்:- எங்கள் அணிக்கென்று எந்த பெயரும் இல்லை. ஏற்கனவே பயன்படுத்திய பெயரை கேட்டு கோர்ட்டிற்கு சென்று இருக்கிறோம். குக்கர் சின்னத்தை தான் கேட்டு இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story