திருச்சியில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் திடீர் தீ


திருச்சியில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் திடீர் தீ
x
தினத்தந்தி 4 Feb 2018 4:15 AM IST (Updated: 4 Feb 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் திடீர் தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பல லட்சம் ரூபாய் தப்பியது

திருச்சி,

திருச்சி பொன்னகரில் கரூர் வைஸ்யா வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. அந்த மையத்தில் உள்ள ஏ.சி. எந்திரத்திற்காக வைக்கப்பட்டிருந்த இன்வெர்ட்டரில் இருந்து நேற்று காலை 7 மணிக்கு திடீரென்று கரும்புகை வெளியேறி தீப்பிடித்தது. இதையடுத்து தீ ஏ.டி.எம். மையம் முழுவதும் பரவ தொடங்கியது. இதனைக்கண்டு அதிர்ச்சி யடைந்த அவ்வழியாக சென்ற ஒருவர் இதுகுறித்து உடனடியாக திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் தனபால் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து, அரை மணி நேரம் போராடி ஏ.டி.எம். மையத்தில் பரவியிருந்த தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக ஏ.டி.எம். எந்திரத்தில் தீ பரவவில்லை. அதற்குள் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்து விட்டதால், ஏ.டி.எம். எந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது. ஏ.டி.எம். மையத்தின் ஏ.சி. எந்திரத்திற்காக வைக்கப்பட்டுள்ள இன்வெர்ட்டரில் தண்ணீர் இல்லாமல் சூடாகி வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக செசன்சு கோர்ட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story