மானியவிலையில் ஸ்கூட்டர் வாங்குவதற்கு ஓட்டுனர் உரிமம்பெற 6 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம்


மானியவிலையில் ஸ்கூட்டர் வாங்குவதற்கு ஓட்டுனர் உரிமம்பெற 6 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம்
x
தினத்தந்தி 4 Feb 2018 4:30 AM IST (Updated: 4 Feb 2018 2:11 AM IST)
t-max-icont-min-icon

மானிய விலையில் ஸ்கூட்டர் வாங்குவதற்காக, வேலூர் மாவட்டத்தில் ஓட்டுனர் உரிமம் கேட்டு 6 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

வேலூர்,

பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு நிபந்தனைகளும் விதிக் கப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டர் வாங்குவதற்கு ஓட்டுனர் உரிமத்தையும் இணைக்க வேண்டும். இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன.

இந்த நிலையில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக அனைத்து பகுதிகளிலும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் வேலூர், ராணிப்பேட்டை, வாணியம்பாடி ஆகிய இடங்களில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க பெண்கள், கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். மானிய விலையில் ஸ்கூட்டர் பெறுவதற்கான விண்ணப்பங்கள் கலெக்டர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், இரு சக்கர வாகனங்கள் விற்பனை நிலையங்கள் போன்ற இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்கள் பெறுவதற்கும் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு கடந்த திங்கட்கிழமை முதல் அதிக விண்ணப்பங்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அலுவலகம் செல்லும் பெண்களின் வசதிக்காக விடுமுறை நாளான நேற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டன. இதனால் நேற்று ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக விண்ணப்பிக்க பெண்கள் அதிக அளவில் வந்திருந்தனர். இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில் கடந்த 6 நாட்களில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story