மனைவியை கொலை செய்ய முயன்ற ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டுகள் சிறை கோர்ட்டு தீர்ப்பு


மனைவியை கொலை செய்ய முயன்ற ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டுகள் சிறை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 4 Feb 2018 3:45 AM IST (Updated: 4 Feb 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

மனைவியை கொலை செய்ய முயன்ற ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

வேலூர்,


வேலூரை அடுத்த அன்பூண்டி கிராமம் கொல்லைமேடு புதிய காலனியை சேர்ந்தவர் தசரதன் (வயது 35). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி விஜயலட்சுமி (31). இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். திருமணமான சில ஆண்டுகளில் தசரதன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அதன்பின் விஜயலட்சுமி அதே பகுதியில் தனது குழந்தைகளுடன் வேறு வீட்டில் வசித்து வந்தார். செங்கல் சூளையில் வேலைபார்த்து அதன் மூலம் கிடைக்கும் ஊதியத்தில் குழந்தைகளை அவர் வளர்த்து வந்தார். எனினும் தசரதன் விஜயலட்சுமியின் வீட்டிற்கு வந்து செல்வார். அப்போது விஜயலட்சுமியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அது குறித்து கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2013–ம் ஆண்டு ஜனவரி மாதம் 31–ந் தேதி வீட்டில் விஜயலட்சுமி வீட்டில் இருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த தசரதன் அவரை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து அருகில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து அவர் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

வலியில் அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு வேலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் லட்சுமி பிரியா ஆஜராகி வாதாடினார். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் நீதிபதி மதுசூதனன் தீர்ப்பு அளித்தார். அதில், மனைவியை கொலை செய்ய முயற்சித்த காரணத்திற்காக 7 ஆண்டுகளும், அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த காரணத்திற்காக ஒரு ஆண்டும் என 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையை தசரதன் ஏக காலத்தில் (7 ஆண்டுகள்) அனுபவிக்க வேண்டும். மேலும், ரூ.5 ஆயிரம் அபராத தொகையும் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து போலீசார் அவரை பலத்த காவலுடன் வேலூர் ஜெயிலுக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

Next Story