வ.உ.சி. மைதானத்தில் புத்தக திருவிழாவில் கலைநிகழ்ச்சி அமைச்சர் ராஜலெட்சுமி தொடங்கி வைத்தார்


வ.உ.சி. மைதானத்தில் புத்தக திருவிழாவில் கலைநிகழ்ச்சி அமைச்சர் ராஜலெட்சுமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 5 Feb 2018 4:15 AM IST (Updated: 4 Feb 2018 11:35 PM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடந்து வரும் புத்தக திருவிழாவில் கலை நிகழ்ச்சிகளை அமைச்சர் ராஜலெட்சுமி தொடங்கி வைத்தார்.

நெல்லை,


நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் ‘‘நெல்லை புத்தக திருவிழா’’ நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2–வது நாளில் கலைநிகழ்ச்சி தொடக்க விழா அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி கலந்து கொண்டு, கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். மேலும், நெல்லை மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் பாடல் எழுதி, இசை அமைக்கப்பட்ட நெல்லை கீதம் இசைத்தொகுப்பையும் அவர் வெளியிட்டார்.

இந்த விழாவில் அமைச்சர் ராஜலெட்சுமி பேசியதாவது:–


நெல்லை மாநகரில் புத்தக திருவிழா நடத்துவது மிகப்பெருமையான ஒன்றாகும். உலகில் எல்லா செயல்களையும்விட உயர்ந்தது அறிவு பசியை போக்குகின்ற புத்தக திருவிழா நடத்துவதுதான். இந்த புத்தக திருவிழாவில் கலந்து கொள்வதை நான் பெருமையாக கருதுகிறேன். புத்தகம் வாங்குவது செலவு அல்ல. அது அறிவுக்கு செய்யும் மூலதனமாகும். நமது அறிவுக்கண்ணை திறப்பது நல்ல நூல்கள்தான். கல்லில் சிற்பம் செதுக்குவதை போல, களிமண்ணில் மண்பாண்டம் செய்வததை போல, நல்ல நூல்கள் நம்மிடம் இருக்கும் தேவை இல்லாதவற்றை செதுக்கி, தேவையானவற்றை சேர்த்து, நம்மை அறிவு பாத்திரமாக மாற்றும்.

ஒரு நல்ல நூல் சிறந்த நண்பனுக்கு சமமாகும். நல்ல நூல் எழுதி முடிக்கப்பட்டால் ஒரு சிறைச்சாலையின் கதவு மூடப்பட்டதற்கு சமமாகும் என்ற வைர வரிகளை எண்ணிப்பார்க்க முடிகிறது. வாழ்க்கை எனும் பூட்டை திறக்கும் சாவி புத்தகமாகும். நாம் வாழ்க்கையின் மேலான நிலையை அடைய உறுதுணை புரிவது புத்தகங்களே ஆகும். நமது நெல்லைக்கு பெருமைச் சேர்க்கும் புத்தக திருவிழா சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் ராஜலட்சுமி பேசினார்.


இந்த கண்காட்சியில் ‘தினத்தந்தி’ சார்பில் ஒரு அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு தந்தி பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள புத்தகங்கள் பொதுமக்கள் பார்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டு உள்ளன. கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர் ராஜலெட்சுமி, ‘தினத்தந்தி‘ அரங்கத்தையும் பார்வையிட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் பற்றிய விவரங்களையும் கேட்டறிந்தார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், சேரன்மகாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ், உதவி கலெக்டர் (பயிற்சி) இளம்பகவத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மளிர் திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமலினி, அ.தி.மு.க. மாநகர மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், டான்பெட் துணைத்தலைவர் கண்ணன் என்கிற ராஜீ, ஆவின் தலைவர் ரமேஷ், நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, நெல்லை–தூத்துக்குடி நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story