ராணுவ வீரருடன் நடக்க இருந்த திருமணத்தை தடுத்த மைனர் பெண்


ராணுவ வீரருடன் நடக்க இருந்த திருமணத்தை தடுத்த மைனர் பெண்
x
தினத்தந்தி 5 Feb 2018 3:45 AM IST (Updated: 5 Feb 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

அணைக்கட்டு அருகே ராணுவ வீரருடன் நடக்க இருந்த திருமணத்தை போலீஸ் நிலையத்துக்கு சென்று மைனர் பெண் தடுத்து நிறுத்தினார். இரண்டாவதாகவும் மைனர் பெண்ணுடன் அதே மணமகனுக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அணைக்கட்டு,

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள ஒடுகத்தூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 27), ராணுவ வீரர். இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து அணைக்கட்டு பகுதியில் ஒரு பெண்ணை பார்த்து திருமணத்துக்கு நிச்சயம் செய்தனர். அந்த பெண் 18 வயது நிரம்பாத மைனர். மேலும் அவருக்கு திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை.

ஆனாலும் வயதையும், பெண்ணின் விருப்பத்தையும் இரு குடும்பத்தினரும் பொருட்படுத்தாமல் நேற்று ஒடுகத்தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடத்த திட்டமிட்டு அதற்கான அழைப்பிதழை தயார் செய்து உறவினர்களுக்கு கொடுத்து ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இதற்கிடையில் மைனர் பெண் “தனக்கு 18 வயது முடியட்டும், மேற்படிப்பை முடித்தபின்னர் திருமணம் செய்து கொள்கிறேன்” என்று பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர் அவரை திருமணத்துக்கு கட்டாயப்படுத்தி உள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் நேற்று முன்தினம் அணைக்கட்டு போலீஸ் நிலையத்துக்கு சென்று பெற்றோர் மீது புகார் அளித்தார்.

“மைனர் பெண்ணான தனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். எனவே, திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று அவர் அதில் கூறியிருந்தார். இதையடுத்து போலீசார் இரு குடும்பத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு பதிலாக அவரது உறவினரான மற்றொரு பெண்ணை மணமகளாக்கினர். அவருக்கும் 18 வயது பூர்த்தியாகவில்லை. ஆனாலும் 2-வதாக பார்த்த மைனர் பெண் ராணுவ வீரரை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் நேற்று காலை குறித்த நேரத்தில் திருமணம் நடத்த ஒடுகத்தூர் திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்தது.

இதனிடையே மைனர் பெண்ணுக்கு திருமணம் நடப்பதாக வேலூர் உதவி கலெக்டர் செல்வராஜிக்கு புகார் வந்தது. அதன்பேரில் அவர், உடனடியாக மைனர் பெண் திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு அணைக்கட்டு தாசில்தார் மதிவாணனுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து தாசில்தார் தலைமையில் வருவாய்த்துறையினர் நேற்று முன்தினம் இரவு திருமண மண்டபத்துக்கு சென்றனர். அங்கு மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இரு குடும்பத்தினரையும் அதிகாரிகள் அழைத்து பேசி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

2 முறை மணமகள் மாறியும் மைனர் பெண் என்பதால் ராணுவ வீரரின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story