நாமக்கல்லில் மூதாட்டியிடம் நகை பறிப்பு; வடமாநில கொள்ளையன் கைது


நாமக்கல்லில் மூதாட்டியிடம் நகை பறிப்பு; வடமாநில கொள்ளையன் கைது
x
தினத்தந்தி 5 Feb 2018 4:30 AM IST (Updated: 5 Feb 2018 2:26 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் வடமாநில கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்,


நாமக்கல் – சேலம் சாலை முருகன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே கடந்த மாதம் 15–ந் தேதி நடந்து சென்ற சாந்தி (வயது 70) என்ற மூதாட்டியிடம் 4 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதேபோல் கடந்த 23–ந் தேதி வள்ளிபுரம் அருகே நடந்து சென்ற பாண்டியன் என்பவரிடம் வடமாநில பதிவெண் கொண்ட காரிலும், மோட்டார் சைக்கிளிலும் வந்த மர்ம ஆசாமிகள் ரூ.500 வழிப்பறி செய்தனர்.

தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அவர்களுடைய வாகனத்தை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். போலீசார் துரத்துவதை அறிந்த மர்ம ஆசாமிகள் கீரம்பூர் அருகே காரை நிறுத்திவிட்டு தப்பி சென்றனர். போலீசார் அந்த காரை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.


இந்த நிலையில் கடந்த 25–ந் தேதி நல்லிப்பாளையம் போலீசார் நாமக்கல் ரெயில் நிலையம் அருகே ஒரு கடையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டு இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் மத்திய பிரதேச மாநிலம் பூரான்பூர் மாவட்டத்தை சேர்ந்த குணால்டேக் (27), ரஜினிகாந்த் ஷெஸ்வால் (26), பாசிட் ஆசீஸ் பகவதி ஜாதவ் (23) என்பதும், இவர்கள் தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நகை பறிப்பு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


அவர்களின் கூட்டாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் நல்லிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் முதலைப்பட்டி பைபாஸ் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர், போலீசாரை கண்டதும், வாகனத்தை திருப்பி தப்பிக்க முயற்சி செய்தார்.

அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் ஆந்திர மாநிலம் ஆனந்தபூர் மாவட்டம் குண்டக்கல் தாலுகா கங்காநகரை சேர்ந்த ஷேக் நம்தார் உஷேன் (25) என்பது தெரியவந்தது. மேலும் இவர் கடந்த 15–ந் தேதி முருகன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்ற மூதாட்டி சாந்தியிடம் விலாசம் கேட்பது போல் நடித்து, அவரிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் கரூர் சென்று அங்கிருந்து ஆந்திரா தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஷேக் நம்தார் உஷேனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வடமாநில கொள்ளையனை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பாராட்டினார்.


Next Story