ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி - மனைவியை தாக்கி ரூ.10 லட்சம் நகைகள், பணம் கொள்ளை


ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி - மனைவியை தாக்கி ரூ.10 லட்சம் நகைகள், பணம் கொள்ளை
x
தினத்தந்தி 6 Feb 2018 3:45 AM IST (Updated: 6 Feb 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

நள்ளிரவில் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி - மனைவியை தாக்கி ரூ.10 லட்சம் நகைகள், பணம் கொள்ளை முகமூடி அணிந்து மர்ம நபர்கள் துணிகரம்.

மங்களூரு,

கார்கலா தாலுகாவில், நள்ளிரவில் முகமூடி அணிந்தபடி வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி மற்றும் அவருடைய மனைவியை தாக்கி ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,
உடுப்பி மாவட்டம் கார்கலா தாலுகா பங்களாகுட்டே ஜங்ஷன் பகுதியில் வசித்து வருபவர் சஞ்சீவ் நாயக்(வயது 61). இவர் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி யசோதா(56). இவர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 3-ந் தேதி அன்று இரவு வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது நள்ளிரவில் இவர்களது வீட்டின் கதவை யாரோ மர்ம நபர்கள் தட்டினர். இதையடுத்து விழித்தெழுந்த சஞ்சீவ் நாயக் கதவை திறந்து பார்த்தார். அப்போது 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் முகத்தில் முகமூடி அணிந்தபடி அதிரடியாக வீட்டிற்குள் புகுந்தனர்.

அவர்கள் சஞ்சீவ் நாயக்கை சரமாரியாக தாக்கினர். இதனால் அவர் அலறினார். அவரது அலறல் சத்தத்தைக்கேட்ட யசோதா படுக்கை அறையில் இருந்து எழுந்து வந்து பார்த்தார். அப்போது அவர் தனது கணவரை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் தாக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவர் கூச்சலிட்டார்.

இதையடுத்து மர்ம நபர்கள் யசோதாவையும் சரமாரியாக தாக்கினர். பின்னர் சஞ்சீவ் நாயக் மற்றும் யசோதாவின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி அவர்களை மர்ம நபர்கள் கொல்ல முயன்றனர். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சஞ்சீவ் நாயக் வாந்தி எடுத்தார். மேலும் அவர் நிலைகுலைந்தார். இதைப்பார்த்து யசோதா பதறினார்.

அப்போது அந்த மர்ம நபர்கள், யசோதா அணிந்திருந்த நகைகளை கழற்றித்தரும்படி கேட்டனர். இதையடுத்து அவர் தான் அணிந்திருந்த நகைகளை கழற்றிக் கொடுத்தார். பின்னர் வீட்டில் நகைகள் மற்றும் பணம் எங்கிருக்கிறது என்று கேட்டனர். அதற்கு அவர் பீரோவை காட்டினார். இதையடுத்து மர்ம நபர்கள் யசோதாவிடம் இருந்து பீரோ சாவியை பறித்தனர்.

பின்னர் பீரோவைத் திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டனர். மேலும் வீட்டில் இருந்த விலை உயர்ந்த செல்போன்கள், வெள்ளிப் பொருட்களையும் மர்ம நபர்கள் அள்ளிக் கொண்டனர்.

அதையடுத்து அவர்கள் சஞ்சீவ் நாயக்கையும், யசோதாவையும் கட்டிப்போட்டு விட்டு வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். நேற்று முன்தினம் காலையில் அக்கம்பக்கத்தினர் சஞ்சீவ் நாயக்கின் வீட்டிற்கு சென்றனர். அப்போது அங்கு சஞ்சீவ் நாயக்கும், யசோதாவும் கயிற்றால் கட்டிப் போடப்பட்டு இருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் இதுபற்றி கார்கலா டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு சென்று சஞ்சீவ் நாயக் மற்றும் யசோதாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நள்ளிரவில் மர்ம நபர்கள் கதவை தட்டி, அதிரடியாக உள்ளே புகுந்து சஞ்சீவ் நாயக்கையும், யசோதாவையும் தாக்கி கட்டிப்போட்டுவிட்டு ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரொக்கப்பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மீண்டும் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த தடயங்களை பதிவு செய்து கொண்டனர். பின்னர் மோப்ப நாய் கொண்டுவரப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இதையடுத்து போலீசார் தாங்கள் கைப்பற்றிய தடயங்களை ஆய்வுக்காக தடய அறிவியல் பிரிவினருக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story