தார்மீக ரீதியாக பிரதமர் பதவி வகிக்க மோடிக்கு தகுதி இல்லை சித்தராமையா பேட்டி


தார்மீக ரீதியாக பிரதமர் பதவி வகிக்க மோடிக்கு தகுதி இல்லை சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 6 Feb 2018 5:00 AM IST (Updated: 6 Feb 2018 2:17 AM IST)
t-max-icont-min-icon

பொய் மூட்டைகளை பிரதமர் மோடி அவிழ்த்துவிட்டுள்ளார் எனவும், தார்மீக ரீதியாக பிரதமர் பதவி வகிக்க மோடிக்கு தகுதி இல்லை என்றும் சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் அரசு 10 சதவீத ‘கமிஷன்‘ அரசு என்று பிரதமர் மோடி நேற்று முன்தினம் பெங்களூருவில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்கள் அரசை பற்றி பிரதமர் மோடி குறை கூறி பேசி இருக்கிறார். திட்டங்களில் 10 சதவீத ‘கமிஷன்‘ பெறுவதாக அவர் எந்தவித ஆதாரமும் இல்லாமல் குற்றம்சாட்டி இருக்கிறார். நாட்டின் உயர்ந்த பதவியில் இருக்கும் மோடி இப்படி பொறுப்பற்ற முறையில் குற்றம்சாட்டுவது கண்டிக்கத்தக்கது. உரிய ஆதாரத்துடன் அவர் பேசி இருக்க வேண்டும்.

சட்டசபை தேர்தலை மனதில் நிறுத்தி மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில், அரசியல் உள்நோக்கத்துடன் மோடி எங்கள் அரசை விமர்சித்து இருக்கிறார். தார்மீக ரீதியாக பிரதமர் பதவி வகிக்க மோடிக்கு தகுதி இல்லை. பரிவர்த்தனா யாத்திரையின்போது எடியூரப்பா என்ன பேசினாரோ அதையே தான் மோடியும் பேசி இருக்கிறார். எங்கள் அரசு மீது பொய் மூட்டைகளை மோடி அவிழ்த்துவிட்டு உள்ளார்.

ஊழல் செய்துவிட்டு சிறைக்கு சென்று வந்த எடியூரப்பாவை அருகில் அமர வைத்துக் கொண்டு ஊழல் ஒழிப்பு பற்றி மோடி பேசுகிறார். இது வெட்கக்கேடானது. இதுபற்றி பேச அவருக்கு தகுதி இல்லை. எடியூரப்பா காசோலை மூலம் லஞ்சம் வாங்கியவர். குஜராத்தில் மோடி முதல்-மந்திரியாக இருந்தபோது 9 ஆண்டுகளாக லோக்அயுக்தாவுக்கு நீதிபதியை நியமிக்கவில்லை. ஊழல்கள் வெளியே வரும் என்பதால் அவர் நீதிபதியை நியமிக்கவில்லை.

மத்தியிலும் லோக்பால் அமைப்பை உருவாக்கவில்லை. அதனால் ஊழல் ஒழிப்பு பற்றி பேச மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது?. ஊழல்களை செய்த எடியூரப்பா பா.ஜனதாவின் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எடியூரப்பாவின் ஊழல்களை மக்கள் மறக்கவில்லை. அரசியல் சாசனத்தை மாற்றுவதாக மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே மோடியின் ஒப்புதலுடனேயே பேசினார்.

அமித்ஷா மகன் ஜெய்ஷாவின் சொத்துகள் குறுகிய காலத்தில் அதிகரித்தது எப்படி?. இதுபற்றி மோடி வாய் திறக்காதது ஏன்?. மகதாயி பிரச்சினையில் தலையிட கோரி கர்நாடக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதுபற்றி பிரதமர் வாய் திறக்கவில்லை. அனைத்துக்கட்சி குழுவுடன் சந்திக்க நேரம் ஒதுக்க அனுமதி கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். பதில் வரவில்லை.

மோடியும், அமித்ஷாவும் 100 முறை கர்நாடகத்திற்கு வந்தாலும் காங்கிரசின் வெற்றியை தடுக்க முடியாது. ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா படுதோல்வி அடைந்துள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். இதனால் பிரதமர் மோடியின் ஆட்சிக்குதான் கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது.

கர்நாடகத்தில் அதிக குற்றங்கள் நடந்துள்ளதாக மோடி கூறுகிறார். நாட்டிலேயே அதிக குற்றங்கள் பா.ஜனதா ஆளும் மாநிலமான உத்தரபிரதேசத்தில் தான் நடந்துள்ளது. குற்ற பட்டியலில் முதல் 10 மாநிலங்களில் கர்நாடகம் கடைசி இடத்தில் உள்ளது. மென்பொருள் உற்பத்தி, தொழில் முதலீடுகளை ஈர்ப்பது உள்பட பல்வேறு துறைகளில் கர்நாடகம் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது.

மோடி முதல்-மந்திரியாக இருந்தபோது குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா கலவரத்தில் 2,000 பேர் கொல்லப்பட்டனர். என்கவுன்ட்டர் கொலை வழக்கில் அமித்ஷா குஜராத்தை விட்டே வெளியேற்றப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. தவறான தகவல்களை வெளியிட்டு கர்நாடக மக்களை மோடி அவமதித்துவிட்டார்.

14-வது நிதி ஆணையத்தின் நிதி ஒதுக்கீட்டின்படி கர்நாடகத்திற்கு இன்னும் ரூ.10 ஆயிரத்து 500 கோடி நிதி வர வேண்டும். வறட்சி நிவாரணத்திற்கு மற்ற மாநிலங்களை விட கர்நாடகத்திற்கு குறைந்த அளவு நிதியை மத்திய அரசு ஒதுக்கியது. இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story